Thursday 30 October 2014

அரசியலில் நாம் எப்போது வெற்றிபெற முடியும்?

இந்த மண் நமது சொந்த மண், இந்த மண்ணுக்குச் சொந்தககாரர்கள் நாம்தான், பூர்வகுடித் தமிழர்களின் அடையாளம் நம் அடையாளம்தான் என்ற உண்மையும் உணர்வும் நமக்குள் தீவிரமாக எழுந்தால் மட்டும்தான் நாம் நமக்கான அரசியலில் வெற்றிபெற்று எழமுடியும். அதற்கு முதலில் நம் பழமையான வரலாற்று விவரங்களை நாம் தெரிந்திருத்தல் வேண்டும். இந்த உணர்வு படிப்படியாக ஆரோக்கியமான வெறியாக மாறாமல் நாம் நம் மாற்றத்தை வேறு எங்கிருந்தும் எதிர்பார்ப்பதில் பயனில்லை. நாம் தொடங்கவேண்டிய முதற்புள்ளியும், இணையவேண்டிய கடைப்புள்ளியும் இதுவொன்றுதான். இல்லாவிடில் நம் அறிவாளிகளின் உழைப்பு வீண்தான்.

மீனவன் / இடையன்

மீனவன், மீனவர்கள் என்பது சாதிப்பெயரா? சாதி அடையாளமா? அது ஏதேனுமொரு மதத்தைக் குறிக்கிறதா? இல்லை. அதுவொரு தொழிற்பெயர். தமிழர்களின் அடையாளங்கள் எல்லாம் இப்படித்தான் சாதியாகவோ மதமாகவோ அடையாளப்படுத்தப்படவில்லை.

தமிழர் வகுத்த பிரிவுகள் :

அரசன்
அந்தணன் (சான்றோன்)
வேளாளன்
வணிகன்
மற்றும் நிலத்தை அடிப்படையாக வைத்து ஐந்திணை அடையாளங்கள்.

குறிஞ்சி - வேடன்
முல்லை - இடையன்
மருதம் - வேளாளன், குடியானவன், மள்ளன்
நெய்தல் - மீனவன், கொங்கன், சேர்ப்பன், மருதன், துறைவன்
பாலை - கள்வன் (களவைத் தொழிலாக மேற்கொள்பவன்)

இவற்றில் யார் வேண்டுமானாலும் யார் வீட்டுப் பெண்ணையும் அவர்கள் எதிர்பார்க்கும் தகுதியிருந்தால் மணக்கலாம். தடையில்லை. அந்தணன் என்பது தமிழ்ச்சொல். இதற்கு பிராமணன் என பலரும் தவறாக எண்ணுகின்றனர். அந்தணர் என்போர் எல்லா பிரிவு சான்றோர்களையும் உள்ளடக்கியது.

வர்ணாசிரமம் வகுத்த பிரிவுகள் :

பிராமணன்
க்ஷத்ரியன்
வைசியன்
சூத்திரன்
பஞ்சமன்

இப்பிரிவுகள் எல்லாம் தமிழர்களின் வாழ்வியலுக்கு நேர்மாறானது. மனிதர்களை பிரித்துவைப்பதன் நோக்கோடு வகுக்கப்பட்டது.

மீனவன் என்ற அடையாளத்தைப் போன்றே இடையன் என்ற அடையாளமும் சாதி, மத அடையாளமற்றது. தமிழர்களின் தொன்மையான தொழிற்சார்ந்த பெயர்கள். ஆனால் மீனவன் என்ற அடையாளம் உலவும் அளவிற்கு இடையன் என்ற அடையாளம் உலவவில்லை. உலவவில்லை என்பதைவிட தவிர்க்கப்படுகிறது என்பதே உண்மை.

எவனும் எந்த அடையாளத்தையும்விட மேலானவனும் இல்லை, கீழானவனும் இல்லை என்பதே தமிழர்களின் அடையாளப் பெயர்கள். இப்பெயர்களுக்குப் பின்னால் கட்டுக்கதைகளும் பொய் புரட்டு புராணங்களும் கிடையாது. வாழ்வியல் முறையின் அடிப்படையிலானது. ஆனால் பார்ப்பான் திணித்த அடையாளங்கள் அப்படியல்ல. பொய் புளுகு கட்டுக்கதைகளே அதற்கு பிரதான பெருமை. எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் பெரும்பாலான தமிழ்ச் சகோதரர்களுக்கு புரிவதில்லை.

நண்பர்களே,
க்ஷத்ரியன்... வைசியன்... என்ற பார்ப்பன வர்ணாசிரம அடையாளங்களையும் பெருமைகளையும் தயவுசெய்து தவிப்பீர்களாக.

எவ்வளவு படித்தும் என்ன பயன்?

நண்பர்களே.., தயவுசெய்து உங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட பழைய சிந்தனைகளை அலசி ஆராயுங்கள். கண்ணைமூடிக்கொண்டு எதையும் பின்தொடராதீர்கள். மாற்றுக்கருத்துக்களை தேடிப் படியுங்கள். உங்கள் கருத்து சரியானதுதானா என ஆராயுங்கள். இல்லையேல் நீங்கள் எவ்வளவு படித்தும் என்ன பயன்?

எங்கே இருக்கிறார் கடவுள்?

வளி மண்டலத்திலிருந்து கடவுளை விரட்டும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று விட்டாலும், மனிதனின் நரம்பு மண்டலத்திலிருந்து கடவுள் தானாக வெளியேறிவிடப் போவதில்லை. பக்தர்களின் மூளையில் எந்த இடத்தில் கடவுள் குடியிருக்கிறார்? மூளையின் எந்தப் பகுதி நரம்புகள் தூண்டப்படும்போது அவர்களின் கண் முன்னே கடவுள் ‘காட்சி’ தருகிறார் அல்லது இயேசு அவர்களுக்குள் ‘இறங்குகிறார்’ ? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டு வருகின்றது நரம்பியல் மருத்துவம்.

“மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன், மற்றும் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் ‘டெம்பரல் லோப்’ என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது. மூளையின் இந்தப் பகுதி வலிப்பு நோயால் பாதிக்கப்படும் போதோ அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான ‘ஆன்மீக அனுபவங்கள்’ ஏற்படுகின்றன” என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் பெர்சிங்கர்.

இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ருடி அபால்டர் என்ற நாத்திகர், உயிரோடு இருக்கும்போதே தான் இறந்துவிட்டது போன்ற நினைப்புக்கு ஆளானார். இன்னொரு நோயாளியான வென் திகே என்ற கிறித்தவப் பெண்ணோ, ‘தான் ஏசுவைப் பெற்றெடுத்திருப்பதாக’க் கூறினாள். மோசஸ், புனித பால் முதலானோர் ‘கண்ட’ காட்சிகளாக விவிலியத்தில் கூறப்படுபவை, வென் திகேயின் ‘அனுபவத்தை’ ஒத்திருப்பதால், இறைத்தூதர்கள் தீர்க்கதரிசிகள் என்று கூறப்படுவோர் இந்த மூளை வலிப்பினால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கக் கூடும் என்கிறார் பெர்சிங்கர்.

“செவன்த் டே அட்வன்டிஸ்ட் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எல்லன் ஒயிட் என்ற பெண்ணுக்கு (1836 இல்) 9 வது வயதில் மண்டையில் அடிபட்டு, மூளையில் காயம் ஏற்பட்டது. இதற்கு ஆதாரமும் உள்ளது. இதன் பிறகுதான் ‘ஏசு அவர் முன் ‘தோன்றத்’ தொடங்கினார்” என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி கிரகரி ஹோம்ஸ். மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய ‘இறையருள்’ கிட்டும் என்பதில்லை. தொடர்ந்து ஆன்மீக சிந்தனையால் தாக்கப்படுபவர்களுக்கும் இத்தகைய ‘உள்காயம்’ ஏற்படக்கூடும். “இந்த வலிப்பு தோற்றுவிக்கும் மின் அதிர்வுகள் ‘டெம்பரல் லோப்’ என்ற பகுதிக்கும், உணர்ச்சியையும் உணர்ச்சி சார் நினைவுகளையும் ஆளுகின்ற மூளையின் பகுதிகளுக்கும் உள்ள இணைப்புகளை வலுப்படுத்துவதால், மத உணர்வுகள் பொங்குகின்றன” என்கிறார் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி, விலயனூர் ராமச்சந்திரன்.

“ஒருவேளை மூளையில் கடவுள் ‘குடியிருக்கும்’ இந்தப் பகுதியை (God Spot) அறுத்து அகற்றுவோமாகில், அந்த அறுவை சிகிச்சைக்கு என்ன பெயரிடலாம்? அதனை காடோக்டமி (வாசக்டமி போல) என்று அழைக்கலாமா?” என இரு மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வேடிக்கையாக அவர் குறிப்பிட்டார்.

- குரங்கின் தூதுவன் என்ற முகநூல் பக்கத்திலிருந்து

இடையர்களே அரசியலுக்கு வாருங்கள்...

எல்லோரும் அவரவர் திறமைக்கேற்ப உங்கள் பகுதி உள்ளூர் அரசியலில் ஈடுபடுங்கள். ஓராயிரம் பேர் ஈடுபட்டால்தான் ஒருவருக்காவது பதவி கிடைக்கும். அடுத்தவர்களை வளர்த்துவிட்டு ஒதுங்கி நிற்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் அரசியலுக்கு வாருங்கள். மாநிலக் கட்சிகளில் பங்கெடுங்கள், ஏழை எளிய மக்களுக்கு கை கொடுங்கள்.

பிரச்னைகளுக்கான நிரந்தரத் தீர்வு

உங்கள் உள்ளூர் பிரச்னைகளுக்கு தீர்வாக வன்முறையை தேர்ந்தெடுக்காதீர்கள். புலியின் வாலைப் பிடித்த கதையாக அது வளரும், பின் நம்மையும் தாக்கும். ஒரு இனத்துக்காக வாழ்வையும் உயிரையும் துறப்பதைவிட அதற்காகவே வாழ்வதே அறிவாளித்தனம். உணர்ச்சி வேகத்திற்கு ஆட்படாமல் மன அமைதியோடும் சமயோசிதத்தோடும் எதையும் எதிர்கொள்ளுங்கள், வெல்லுங்கள். இதுதான் நிரந்தரத் தீர்வாகும்.

Tuesday 21 October 2014

மண்குதிரைகளின் மீதான பயணம்?

முதலில் நம் இளைஞர்களின் சிந்தனைகளை மாற்ற வேண்டும். பிறகுதான் மாற்றங்கள் சாத்தியம். அறிவுப் புரட்சியை நடத்தாமல் அரசியல் புரட்சியை நடத்த வாய்ப்பில்லை. அறிவார்ந்த இளைஞர்களாலே ஒரு சமூகம் நிரந்தரமாக முன்னேற்றமடையும். அறிவுக்கு ஒவ்வாத பழமையான கருத்துக்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு முற்போக்கு சக்தியாய் மாறுங்கள். மாற்றுங்கள். காலம் அதிகமானாலும் இதுவே நமக்கு நிரந்தர பாதுகாப்பும் தீர்வுமாக இருக்கும். நம் இளைஞர்களிடம் முற்போக்குக் கருத்துக்கள் எதையும் பிரச்சாரம் செய்யாமல் அவர்களை உலக ஓட்டத்திற்கு ஏற்ப தயார் படுத்தாமல் வெறுமனே முன்னேற்றத்திற்கு பாடுபடுவதாய் அறிவித்துக்கொண்டு செயல்படும் எந்தவொரு அமைப்பும் நம் மக்களின் அறியாமையை தங்களின் சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வதாகவே அர்த்தம். எல்லோரின் உழைப்பும் அக்கறையும் வீணாகக் கூடாது என்பதே எம் விருப்பம்.

விருப்பமுள்ளவர்கள் பகிருங்கள்...

சூரிய சந்திர கிரகணங்களை மனிதன் முன்கூட்டியே கணித்தது எப்படி?

ஒருகணம் கண்ணை மூடி ஆதிகாலத்திற்குச் செல்லுங்கள். ஆதியிலிருந்து படிப்படியாக நாகரிகத்தில் வளர்ந்த மனிதன் ஒரு காலகட்டத்தில் கணித சிந்தனைக்குள் நுழைகிறான். எல்லாவற்றையும் ஏதோவொரு கணக்குக்குள் கொண்டுவருகிறான். அதன் நீட்சியாய் இயற்கையாய் அவன் கண்ட இரவுபகலை வகுக்க ஆரம்பிக்கிறான். நாட்களை வரையறுக்கிறான். நாழிகை அளவீடுகளால் நாட்களை பிரிக்கிறான். பின் இதனடிப்படையில் படிப்படியாய் ஜாமம், வாரம், மாதம், பருவகாலம், வருடம் என கணிதம் விரிகிறது. காடுகளின் நடுவே விலங்கோடு விலங்காய் வாழ்ந்த அவனுக்கு அப்போது பெரும் அச்சத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது என்னவென்றால் இயற்கையாக அவனோடு வாழ்ந்த வானம், சூரியன், நிலா, மழை, வெயில், இடி, மின்னல், விண்மீன்கள், மரணம் இவைகள்தான்.

உணவுதேடி பூமியில் உழைத்துவிட்டு இரவில் வானமே கூரையாய் படுக்கும்போது நாள்தோறும் அவனது கவனம் வானத்திலேயே குவிந்திருக்குமென்பது இயல்புதான். எல்லா காலகட்டத்திலும் அவ்வப்போது ஒரு அதிக கூர்மையான சிந்தனை படைத்தவன் வாழ்ந்துதான் இருப்பான். அப்படி ஒருவன் தொடர்ச்சியாக இந்த இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து அவதானித்திருப்பான். தினசரி நகரும் நிலவையும் சூரியனையும் விண்மீன்களையும் பற்றி சிந்தித்த அவன் அதைப்பற்றிய ஆவலை தன் உணர்வையொத்த சக மனிதர்களிடம் அறிவித்து ஒரு குழுவாய் பல வருடங்களாய் பரம்பரையாய் அதன் நகர்வுகளை பின்தொடர்ந்திருப்பார்கள்.

இன்றைக்கு நாம் சாதாரணமாக கருதும் ஒவ்வொரு அறிவியல் உண்மைகளின் பின்னாடியும் பல நூற்றாண்டுத் தேடல் இருப்பது யோசிக்கத்தக்கது. இப்படி தொடர்ச்சியாய் கணித அறிவோடு இயற்கையை கவனித்தபோது, அவ்வப்போது சூரியன் சற்றுநேரம் இருளடைவதும் பௌர்ணமியன்று நிலா இருளடைவதும் அவர்களை அச்சப்படுத்தியிருக்கும். இதற்கு காரணம் (பாம்பு, ராகு, கேது) இதுதான் என அப்போது அவர்களுக்கிருந்த அறிவுப்படி எதையாவது அக்கால மக்களுக்கு ஒவ்வொரு பகுதியிலும் ஒருவாறாக சொல்லியிருக்கலாம். இதெல்லாம் நிழல்கள்தான் என்பது இன்றைக்கு அறிவியல் கண்டுபிடித்துவிட்டது.

அடுத்தடுத்து நடக்கும் இவ்வாறான இரண்டு நிகழ்வுகளுக்குள் இருக்கும் கால இடைவெளியை ஒருமுறை கணித்து, அடுத்தமுறை தோன்றும் இடைவெளியோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே அடுத்தடுத்து அது தோன்றக்கூடிய காலக்கணக்கு எளிதில் வசப்பட்டுவிடுகிறது. ஏற்கெனவே நாழிகை, நாட்கள், மாதம், வருடம் என அவன் வகுத்த கணக்குகளின் துணையால் அடுத்தடுத்த தொடர்ச்சியான கிரகணங்களை அவன் கணித்துவிடுகிறான். இதனடிப்படையில்தான் சித்தர்களும் கோள்களின் நகர்வுகளை கணித்திருக்கக்கூடும். இது அறிவை பயன்படுத்தியவர்களின் கூட்டுச்செயல்தானே தவிர தனி மனித சாகசமில்லை. இதிலெல்லாம் கடவுளின் அருள், ஞானம் என்பதுமாதிரியான தனிப்பட்ட விசேஷங்கள் எதுவுமில்லை. அப்படி ஒன்று இருந்திருந்தால் அவ்வுண்மைகளோடு தோராயமான புனைகதைகளெல்லாம் கலந்து இன்றுவரையிலும் மக்கள் மத்தியில் உலவிக்கொண்டிருக்க வாய்ப்பேயில்லை.

எக்காலத்திலும் அதிகமான ஆர்வத்தோடும் அக்கறையோடும் ஆழ சிந்திக்கிறவனால்தான் எல்லா உண்மைகளும் மக்களுக்குத் தெரியவந்தது, தெரியவருகிறது. அறிவியல் வளர்ந்த இக்காலகட்டத்திலும் நிலவில் வளர்பிறையும் தேய்பிறையும் எப்படி தோன்றுகிறது என்பது முக்கால்வாசிப் பேர்களுக்குத் தெரிவதில்லை என்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என எண்ணிப்பாருங்கள். மின்சாரம் வராத காலகட்டத்தில் இரவுகளில் இந்த வானத்தோடும் நிலவோடும் விண்மீண்களொடும்தான் நாமும்தான் வாழ்ந்துகொண்டிருந்தோம். பல நூறு ஆண்டுகளாக இப்படி இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்களின் கண்டுபிடிப்புகள்தான் இவைகளேதவிர கடவுளும் இல்லை மண்ணாங்கட்டியுமில்லை.

அப்படி கடவுள் ஒருவனே எல்லாவற்றுக்கும் காரணமாகவும் மனிதர்களைப் படைப்பதாகவும் இருந்தால், ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் அதன் மூளையில் பகவத்கீதையையோ குர்ரானையோ பைபிளையோ இன்னபிற புனிதக்கதைகளையோ புகுத்தி படைக்கலாமே?

பிறந்து சில நாட்களே ஆன பலகுழந்தைகள் நீராலோ நெருப்பாலோ விபத்தாலோ இறந்து போகும்படி படைக்கப்படுவது ஏனோ?

Wednesday 1 October 2014

கம்யூனிசம் தோற்றுப்போனதா?

சகல மக்களின் ஏற்றமும் தாழ்வும் சக மக்களின் உழைப்பைச் சுரண்டும் சூழ்ச்சிக்காரனாலேதான் ஏற்படுகிறது. கடவுள், தலைவிதி என்று ஏதுமில்லை. மக்களின் அறியாமையைக்கொண்டே அவர்களை பலாத்காரப்படுத்தி வைக்கவே இவைகள் உண்டாக்கப்பட்டன. முதலாளித்துவவாதிகளின் பலம் இதிலேதான் இருக்கிறது. மார்க்சியம் என்பது அறிவியல். சகல மக்களும் மாற்றத்திற்கான அவசியத்தை உணரும்போதே இது சாத்தியம். கம்யூனிசத்தின்பேரில் அரசமைத்த நாடுகளின் ஆற்றலையெல்லாம் தன்னுடன் மோதி அழிப்பதிலேயே கவனமாய் காவு வாங்கிக்கொண்டது முதலாளித்துவம். இருந்தும் அது அரசாண்டவரையில் பிற நாட்டு வளர்ச்சிகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். மக்களின் அறியாமை முற்றிலுமாக விலகவேண்டும் என்ற அக்கறையில் ஆதாயம் கருதாமல் உலகில் எங்கேனும் கட்சியோ இயக்கமோ முதலாளித்துவவாதிகளால் நடத்தப்படுகிறதா? இருக்காது. மக்களின் அறியாமைதான் அவர்களின் சொகுசு வாழ்வின் அட்சய பாத்திரம். ஆனால் எவ்வித ஆதாயமும் கருதாமல் உடல் பொருளையும் இழக்கும் தியாக மனப்பான்மையோடு உலகில் ஏராளமான கம்யூனிச இயக்கங்கள் இருக்கின்றன. பல நூற்றாண்டு கொடுமைகளை, சுரண்டல்களை, அறியாமைகளை 200 ஆண்டுகால மார்க்சியம் உடனடியாக வெல்லும் என்று எதிர்பார்ப்பதும்; வெல்லவே முடியாது என்று கட்டியம் கூறுவதும் நியாயமில்லை. வளரும்போதே சதி செய்து அதை வீழ்த்தும் மனசாட்சியற்ற முதலாளித்துவத்தின் முன்னால் போராடி வெற்றி பெறுவது எளிதல்ல. இன்றைக்கு பல நாடுகளிலும் கம்யூனிசத்தின்பேரால் பல வடிவங்களில் பிழைப்புவாத அரசியல் செய்ய வந்துவிட்டார்கள் பல முதலாளித்துவவாதிகள். இதுவும் திட்டமிட்ட சதி. இதனாலேயே ஆழ உணராத மேலோட்டமான தன் ஆதரவாளர்களிடம் கம்யூனிசம் ஏமாற்றத்தை கொடுத்துவிட்டது எனலாம். கம்யூனிசம் தங்களுக்கு எவ்வளவு பெரிய ஆபத்து என்பது ஏமாற்றுக்காரர்களுக்குத் தெரிகிறது, ஆனால் இது எவ்வளவு பாதுகாப்பு என இன்னும் மக்களுக்குத் தெரியவில்லை. பூரணமாய் இருந்தவரையில் குறுகிய காலத்திலேயே அந்தந்த நாடுகளில் கம்யூனிசம் சாதித்தது ஏராளம். இந்த நூற்றாண்டோடு உலக வரலாறு முடிந்துவிடவில்லை. இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுமே முதலாளித்துவ சுரண்டலை தம் மதத்தின் பேரால் காப்பாற்றியாக வேண்டிய அடியாட்களாகவே வளர்க்கப்படுகிறது. கம்யூனிசத்தை வளர்க்க எந்தக் குழந்தைகளும் இயல்பிலேயே வளர்ப்பில் தயாரிக்கப்படுவதில்லை. அது தானாய் தன் அறிவைத் தேடலை மதங்களைத்தாண்டி வளர்த்துக்கொண்டாலொழிய கம்யூனிசத்திற்கு ஆதரவு என்று உருவாக வாய்ப்பில்லை. முதலாளித்துவம் தன் அடியாட்களை இயற்கையிலே சர்வ வல்லமையோடு இப்படியாக தயாரித்துக்கொண்டிருக்க கம்யூனிசம் தோற்றுப்போனது எனக் கருதுபவர்களின் அரசியல் அறிவை நாம் எங்ஙனம் விமர்சிப்பது?

கம்யூனிசம் தோற்கவில்லை...
முதலாளித்துவத்திற்கு மாற்று கம்யூனிசமே...!

Friday 26 September 2014

"இடையர்களும் யாதவர்களும்"

இது நமது சமுதாய போராளி ஒருவரின் கருத்து ! நமது அமைப்பின் சார்பாக எனது விளக்கத்தையும் கீழே கொடுத்துள்ளேன் ! இதை படிக்கும் நண்பர்களும் தங்களின் கருத்தை நாகரிகமாக முன்வைக்கவும் ! 

///எங்கே இருக்கிறோம்? எப்படி இருக்கிறோம்? 

இலங்கையில் சிங்கள இனத்திலும் ஆடு மாடு மேய்க்கும் இடையர்கள் இருக்கலாம். அரேபியாவிலும் ஆடு மாடு ஒட்டகம் மேய்க்கும் இடையர்கள் இருக்கலாம். இப்படித்தான் உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் கால்நடைகளை மேய்க்கும் இடையர்கள் இருக்கிறார்கள். தொழிலால் அவர்களும் நமக்கும் ஒற்றுமை இருக்கலாம். ஆனால் அவர்கள் வேறு, நாம் வேறு. /// 

நமது நண்பர் ஏன் இலங்கைக்கும் அரேபியாவிற்கும் உதாரணங்களை தேடி சென்றார் என தெரியவில்லை. காரணம் நமது கிராமத்திலேயே நமக்கு பக்கத்துக்கு வீட்டிலேயே ஆடு மாடுகளை மேய்க்கும் பல சமூக மக்கள் உள்ளனரே ! தலித் , வன்னியர் , கவுண்டர், தேவர் , என பல சாதி மக்களும் கால்நடை வளர்ப்பு தொழிலை செய்து வருகின்றனர், ஆதாலால் அவர்களை அனைவரையும் யாதவர்கள் என்று ஏன் நாங்கள் கூறவில்லை ? காரணம் யாதவர்கள் என்போர் யார் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம் என்பதை அறிக. கால்நடை மேய்ப்போர் அனைவரும் யாதவர்கள் என்று நாங்கள் எப்போது கூறினோம் ? அவ்வாறு கூறாதவரிடத்தில் சென்று இலங்கையில் ஆடு மாடு அரேபியாவில் ஆடு மாடு மேய்க்கரவனும் நீயம் ஒரே சாதிய என கேட்டபது சரியா ? இந்த கேள்வியில் முற்றிலும் உடன்பாடில்லை எனக்கு ! தவறான கேள்வி ! 

மற்று கருத்து இருப்பின் பதிவிட்டு விவாதிக்கவும் ! நன்றி !

- சந்திரவம்ச யாதவர் கூட்டமைப்பு -

-------------------------------------------------------------------------------------------------------------------


ஒரு சமுதாயப் போராளியின் கருத்துக்களுக்கான பதில்...

01. /// செய்யும் தொழிலை வைத்தோ அல்லது பேசும் மொழியை வைத்தோ யாதவர்கள் என கூறவில்லை. கண்ணபிரான் வம்சாவளியினர் என்ற ஒற்றை அடையாளம் கொண்டே நாங்கள் அனைவரும் யாதவர்கள் என்கிறோம். /// 

செய்யும் தொழிலை வைத்து அவர்களும் நாமும் யாதவர்கள் என கூறவில்லை என்ற பொருள்பட கூறுவதால் அதைத் தவிர்த்துப் பார்ப்போம். கண்ணபிரான் வம்சாவழியினர் என்ற ஒற்றை அடையாளம் வைத்தே கூறுவதென்றால் இது புராண நம்பிக்கை வழியானதன்றி வேறில்லை. அக்காலத்தில் தமிழர்கள் வணங்கிக்கொண்டிருந்த பல வழிபாட்டு முறைகளை தனதாக்கிக்கொண்டு பல கடவுள்களையும் தங்கள் அடையாளத்திற்கு ஏற்றமாதிரி திரித்துக்கொண்டு பெரும்பாலானோரை கடவுளைக் காட்டி அடிமைப்படுத்திய கூட்டம் செய்த சூழ்ச்சியின் நீட்சி இது. முல்லை நில மாயோனுக்கும் இப்போது நீங்கள் சொல்லும் கண்ணபிரானுக்கும் (கிருஷ்ணன்) எந்தவித தொடர்புமில்லை. கண்ணபிரான் என்பது மட்டும் தமிழ்ப்பெயர்களாக இருக்கலாம். இப்படி இக்கதாபாத்திரத்திற்கு மொழிக்குமொழி பெயர் இருக்கிறது. ஆனால் இந்தக் கதாபத்திரத்தில் தமிழனின் கலாச்சார சித்தரிப்புகளே இல்லை. இதை தனியாக விவாதிக்கலாம். அந்த ஹிந்திக்கார யாதவர்களிடம் சென்று கண்னபிரான் என்றால் ஒன்றும் தெரியப்போவதில்லை, ஆனால் நம்மவூர் அறிவாளிகள் சகல பெயரையும் தெரிந்துகொண்டிருப்பார்கள். அப்படி தெரிந்துகொண்டு இதையும் அதையும் ஒட்டவைத்துக்கொண்டிருப்பார்கள். செய்யும் தொழிலை வைத்தாவது என்றால் ஓரளவு நேர்மையாக இருக்கும், ஆனால் கண்ணபிரான் வழியென்பது புராண கட்டுக்கதையன்றி ஒன்றுமில்லை. இப்படித்தான் குறிஞ்சித்திணை தலைவன் முருகனும் சிவனுக்கு மகனாகி பின் தேவேந்திரனின் பெண்ணை திருமணம் செய்துவைக்கப்பட்டு ஸுப்பிரஹமணி-யானது. தமிழர்களைத் தவிர்த்த எந்த ஹிந்து மதக்காரனுக்கும் முருகன் சிவனின் மகன் என்பதும் கணேசனுக்கு அண்ணனென்பதும் தெரியாது. மாயோனுக்கு மட்டும் இந்த கதி நேரவில்லை, தமிழர்களின் எல்லாவிதமான பண்பாட்டுக் கலாச்சாரத்தின் மீதும்தான் இப்போர் தொடுக்கப்பட்டிருக்கிறது. முல்லை நிலத் “தலைவன்” மாயோன் என்பதுகூட பின்னாளில் முல்லை நிலத் “தெய்வமாக” மாற்றம்பெற்றது எனலாம். முதலில் நாம் வணங்கும் கடவுள்களுக்கு நம் மொழியல்லாத பெயர்கள் எப்படி ஏற்பட்டது என்பதை வெகு சாதாரணமாக யோசித்தாலே இவை விளங்கும். உங்களுக்கு தெய்வ நம்பிக்கை இருந்தால் தமிழில் முல்லைநிலக் கடவுளுக்கு என்னென்ன பெயர் இருக்கிறதோ அவற்றை பரவலாக பலர் அறியச் செய்யுங்கள். வல்லமையிருந்தால் பிறமொழிக்காரர்களிடம் நம் அடையாளங்களை புகுத்தச் செய்யுங்கள். அதைவிடுத்து அவர்களின் அடையாளங்களை சுமந்து பரப்புவதைப்பற்றி அக்கறைப்படவேண்டியது தமிழர்களின் கடமை. பெரும்பாலானோருக்கு விழிப்புவர வாய்ப்பில்லைதான். கற்றவர்களுக்கே இது இல்லாதபோது பாமர மக்களின்மீது வருத்தப்பட்டு பயனில்லை. மெதுமெதுவாகத்தான் பரப்புரை தொடங்கும். 20 அல்லது 30 வருடங்களுக்கு முன்பு நம் முன்னோர்கள் யாரும் இப்படி தங்கள் பெயரின் பின்னால் யாதவ் என போட்டுக்கொள்ளவில்லை என்பதால் இப்போதுதான் இதன் பரப்புரை தேவைப்படுகிறது. 

02. /// தம்பி சின்ன பிள்ளை போல மீண்டும் மீண்டும் செய்யும் தொழில் ஒற்றுமையை வைத்து ஒப்பிட்டு பேசுவது அர்த்தமற்றது. செய்யும் தொழிலால் நாங்கள் ஒன்றுபட்டு இருக்கின்றோம் . ஆதலால் நாங்கள் யாதவர்கள் என்று யார் உம்மிடம் கூறியது. நீங்களாக ஓர் விளக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அதை சுட்டிகாட்டி விவாதிப்பது அர்த்தமற்றது. /// 

யாதவ் என தங்களை கருத்திக்கொள்ளும் பெரும்பாலான இடையர்களும் இந்த விளக்கத்தையே திருப்பி திருப்பிச் சொல்வதனால்தான் இக்கேள்விகூட எழுகிறது. செய்யும் தொழில் பதிலாக இல்லாதபோது இக்கேள்விக்கும் வாய்ப்பில்லை. 

03. /// ஆழ்ந்து நாம் சிந்திக்கும் வேளையில் இங்கே மதம் இனம் மொழி எல்லாமே அடிபட்டுவிடும் ! மனிதம் மட்டுமே எஞ்சி நிற்கும் ! சாதி மதம் மொழி கலாச்சாரம் அனைத்தையும் அல்லது ஏதேனும் ஒன்றி தூக்கி பிடிக்காமல் , மனிதத்தை மட்டும் ஏற்று வாழ் உங்களால் முடியுமா ? அல்லது நீங்களும் நானும் இடையனாக அடையாளப்பட்டு சொந்தகள் போல் உரிமையோடு பழகுவது பேசுவதில் என்ன சொந்த பந்தம் உள்ளது ? நாம் இருவர் என்ன ஓர் தாயின் பிள்ளைகளா ? அல்லது வேறேதாவது உறவு முறையா ? ஒருவனை ஓர் இனத்தோடு சம்மந்தமுள்ளவன் அல்லது சம்பந்தமற்றவன் என்று அறிவதற்க்கான வரையறை என்ன என்று கூறுங்கள் ! /// 

ஆழ்ந்து நாம் சிந்திப்பது என்பது மிகவும் அவசியமானது. பலசமயங்களில் அது மக்களுக்கு வசப்படாமல்போவதால்தான் நம்மை ஆழ சிந்திக்கவிடாதபடி செய்கிற அறிவுக்கு ஒவ்வாத தேவையற்ற கதைகளையெல்லாம் நம்பும்படியாகிறது. எல்லா அடையாளங்களையும் தவிர்த்தால் மனிதம் மட்டுமே எஞ்சி நிற்கும் என்பது உண்மைதான். ஆனால் நாம் தூக்கிச் சுமக்கும் அடையாளங்கள் நம்மைச் சுற்றியுள்ள மக்களை அறியாமையில் ஆழ்த்தாத வரையிலும் / அவர்களின் சிந்தனை வளர்ச்சியை தடுக்காத வரையிலும் எந்த அடையாளங்களையும் தூக்கிச் சுமப்பது தவறொன்றுமில்லை. மொழியால், மொழி வளர்ச்சியால், மொழி வளர்ப்பதால் பயனிருக்கிறது. அவ்வாறேதான் பண்பாடு கலாச்சாரத்தாலும். இந்த அடையாளங்க்களை ஒரு சமூகம் தவிர்க்கவேண்டிய அவசியமில்லை. இவற்றின்பேரால் மக்களை முட்டாளாக்கும் செயல்கள் தொடர்ந்தால் எதிர்த்துதான் ஆகவேண்டும். எதிர்ப்பது என்பது வேறு, தவிர்ப்பது என்பது வேறு. எந்தவொரு மனிதர்களையும் பாதிக்காமல் ஏமாற்றாமல் அவனை அறியாமையில் ஆழ்த்தாமல் ஒரு அடையாளம் வளர்க்கப்படுகிறது எனில் அது “மனிதம்” தானே. அதற்கு மாறாக இருந்தால் மனிதமற்றது என ஒதுக்குவதுதான் நியாயம். 

ஆதியிலிருந்தே மனித இனம் குழுக்களாக வாழ்ந்ததுதான். உங்களுக்கும் எனக்குமான நேரடி உறவு என்பது ஒன்றுமில்லை. இந்த தமிழ்ச்சமூக வரலாறு நம் இருவரையும் ஒரு புள்ளியில் ஒரு பெயரால் ஒரு அடையாளத்தால் ஒரு மொழியால் இணைத்திருக்கிறது. பிற எந்த மொழி குழுக்களைவிடவும் பெரும்பாலான வாழ்வியல் முறைகள் நமக்கு ஒத்திருக்கும். ஒரு இனக்குழுவின் எல்லை என்பது மொழிதான். இன்றைக்கு மாநிலங்கள்கூட மொழியின் அடிப்படையில்தான் பிரிக்கப்பட்டது. ஒரு சாதிக்குழுவின் கலாச்சாரத்தின்மீது மதத் தாக்கத்தைவிட மொழியின் தாக்கமே அதிகமாக இருக்க முடியும். இதன்மீது இடைவெளி அதிகம் இருக்கும்போது நீங்களும் நானும் வேறுதான். மற்றவர்களும் வேறுதான். இப்படி இருக்கும் ஒரே மொழிக்காரர்கள் எல்லோரும் ஏன் ஒன்றாக அடையாளப்பட முடியாது என்றால் அவரவர்களும் நிலப்பரப்புக்கேற்ற செய்தொழிலுக்கேற்ற சற்று வேறான ஒரு வரலாறுப் புள்ளியில் ஏற்கெனவே இணைந்திருப்பதால்தான். இதில் யாரும் யாரையும்விட மேலானவர்களுமில்லை, கீழானவர்களுமில்லை. “அந்தணன் (சான்றோர்) / அரசன் / வணிகன் / வேளாளன்” என மேலோன் கீழோனின்றி நான்கு வகையாக இக்குழுக்கள் தமிழ்ச்சமூகத்தில் எவ்வாறு தோன்றியது என்பதை நோக்குங்கால் இதில் கட்டுக்கதைகளுக்கும் வீண் பெருமைகளுக்கும் இடமில்லை என்பது தெள்ளத்தெளிவு. 

04. /// முதலில் இங்கு வாழும் தமிழர்களுக்கிடையே எப்பேர்பட்ட கலாச்சார முரண்பாடு உள்ளது என அறிந்து கொண்டு பேசுங்கள் ! கலாச்சாரம் என்பது வாழும் இடத்திற்கு ஏற்றவாறு மாறுபடக் கூடியது ! இங்கே அனைவரும் தமிழன் தான் ! அனால் அனைவருக்கு ஒரே மாதிரியான கலாச்சாரம் உண்டென்று கூற முடியுமா ? இந்துவும் கிறிஸ்துவும் முஸ்லீமும் ஒரே வகையான பண்பாட்டுடனா வாழ்கின்றனர் ! மூவருக்கும் வெவ்வேறான கலாச்சாரம் ! அதற்காக அவர்களை தமிழர்கள் இல்லையென கூற முடியுமா ? /// 

கடந்த காலத்திலேயே தனித்தனி செய்தொழில் அடிப்படையிலான வாழ்வியல்முறைகள் ஒவ்வொரு குழுவுக்கும் இருந்துவந்ததனால் எல்லோரும் தமிழர்கள் என்றாலும் ஒரே பழக்கவழக்கம் இருக்க வாய்ப்பில்லைதான். இதுகூட சற்றேறக்குறையதான் மாறுபடுமேயொழிய பிற மொழிக்காரர்களுக்கும் நமக்குமான இடைவெளியோடு இருக்க வாய்ப்பில்லை. ஒரு குழுக்களின் கலாச்சாரம் என்பது அவர்களின் சிந்தனைகளின் மீது எது ஆதிக்கம் செலுத்துகிறதோ அதைப் பொறுத்து மாறுபடக்கூடியது. நீங்கள் குறிப்பிடும் ஹிந்து முஸ்லீம் கிறித்தவம் எல்லாம் இதனடிப்படையில் ஒரே பண்பாட்டுடன் வாழ வாய்ப்பில்லை. மக்களை கூட்டமாக அடிமைப்படுத்த நினைப்பவர்களுக்கு மதம்தான் எளிய ஆயுதமாக இருந்ததால் மக்கள் கூறுபடுத்தப்பட்டார்கள். ஆனாலும் ஒரே மதம் என்றாலுங்கூட ஒவ்வொரு மொழியின் கலாச்சாரத்தாலும் அது வேறுபடவே செய்யும். இன்றைக்கும்கூட ஹிந்துக்கள் என்று ஒரே பெயரில் அழைக்கப்படுகிற தென் ஹிந்தியர்களும் வட ஹிந்தியர்களும் தங்கள் வருடப்பிறப்பை வெவ்வேறு நாளில்தான் கொண்டாடுகிறார்கள். ஆனால் பிற மதத்தினர்கள் அப்படியில்லை. இதன் வரலாற்றை ஆராய்ந்தால் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் மதத்தால் பிரிக்கப்படாமல் மொழியாலே கூடி வாழ்ந்திருக்கிறார்கள் என்பது விளங்கும். இதிலிருந்தே மொழிதான் ஒரு குழுவின் எல்லை என்பது நிதர்சனமாகிறது. 

05. /// பொதுவான மொழி ! அதென்ன பொதுவான மொழி ? ஆங்கிலம் பொதுவான மொழிதான் ! ஆங்கிலம் பேசத் தெரிந்த மக்கள் அனைவரும் ஆங்கிலேயன் என கூறுகின்றீரா ? தேவையில்லாமல் மொழி கலாச்சாரம் தொழில் ஆகியவற்றை வைத்து நீங்களே கேள்வியெழுப்பி அதற்க்கு நீங்களே பதிலளித்து கொண்டிராமல் , சிதறி கிடக்கும் சமூகத்தை எப்படி ஒன்றிணைத்து வளர்ச்சி காண்பதென்ன யோசியுங்கள் அதற்க்கான கருதுகோள்களை பதிவிடுங்கள் ! /// 

மனிதன் பரவிப் பெருக பெருக பலமொழிகள் உருவானது. ஒரே மொழியுடைவர்கள் உலகெங்கும் ஒன்றாகத்தான் கூடி வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைக்கும் கூடி வாழ்கிறார்கள். “எதுவரையில் ஒரு மொழி நீள்கிறதோ அதுவரையில் உன் இனம்” என்ற பாவாணர் கூற்றை கவனியுங்கள். மொழிதான் ஒரு மனிதனின் அடிப்படை அடையாளம். அதன்பொருட்டு வருவதே மற்றதெல்லாம். பொதுமொழி என்பதன் பொருளே அங்கு ஏற்கெனவே இருக்கும் வெவ்வேறு மொழிக்காரர்களை பயன்பாட்டின் அடிப்படையில் இணைப்பது என்பதுதான். அவரவருக்கு ஒரு மொழி இருக்கும்போது யாரும் பொதுமொழியால் அடையாளம் செய்துகொள்வதில்லை. அப்படி செய்பவன் அறிவிலியாகத்தான் இருப்பான். இதனடிப்படையில் ஆங்கிலம் பேசத்தெரிந்தவனெல்லாம் அங்கிலேயனாகிவிட முடியாதுதான். மொழி கலாச்சாரம் தொழில் பற்றி கெள்வியெழுப்புவது எல்லாம் தேவையற்றதல்ல, மிகவும் தேவையானதுதான். ஒவ்வொரு மொழிக்காரனுக்கும் ஒவ்வொரு பிரச்னை. மொழிசார்ந்த மக்களுடன் கூடித்தான் அவரவர் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள முடியும். நம் வரலாறு தெரியாத வேற்று மொழிக்காரனால் நம் பிரச்னைக்கு எப்படி தீர்வளிக்க முடியும்? இன்னொரு மொழிக்காரனின் வரலாறு தெரியாமல் நம்மால் எப்படி அவர்களின் பிரச்னைக்கு தீர்வளிக்க முடியும்? கருத்துக்கள் அனைவரையும் சேரவேண்டுமெனில் எதையும் திரும்பத் திரும்பத்தான் பேசியாக வேண்டும். கருத்துக்களால் ஒன்றிணைக்க முடியாமல் ஒரு சமூகத்தை எப்படி ஒன்று சேர்த்துவிட முடியும்? பாழ்பட்டுக்கிடக்கும் வேருக்கு மருத்துவம் செய்யாமல் கிளைகளுக்கு மருத்துவம் செய்வதால் ஆகக்கூடிய பயன் என்ன? எத்தனை காலங்கள் கழிந்தாலும் எல்லா அமைப்புகளும் ஒரே கூப்பாடு போடுவது எதனால்? சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் செயற்பாடுகளில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்? அது நீடிக்குமா? கடந்த கால சங்கங்களின் வரலாறல்லாவா அதற்கு சாட்சி. நம் வரலாறுதான் நம் மொழியின் வரலாறு. தன் தாய்மொழியுணர்வே ஒருவனிடம் வராதபோது வேறெந்த உணர்வுதான் வந்து என்ன ஆகப்போகிறது? மண்குதிரைகளைக் கூட்டி சவாரியில் கலந்துகொள்ள இயலுமா? 

06. /// நம் இருவருக்குள்ளும் இருக்கும் ஓர் ஒற்றுமை கண்ணபிராண். மற்றொன்று குலப் பெயர்கள் ! நீங்கள் கூறும்படி வட இந்திய யாதவர்களும் தென் இந்திய இடையர்களும் வெவ்வேறு இனக்குழு எனில் - யார் இந்த கண்ணபிரான் ? தென் இந்திய திராவிடனா ? வட இந்திய ஆரியனா ? திராவிடன் எனில் வட இந்திய ஆரிய யாதவர்கள் கண்ணபிரானை தங்கள் குலத்தில் தோன்றியவன் என சொந்தம் கொண்டாடுவதை எதிர்த்து நீங்கள் பிரசாரம் செய்ய வேண்டும் ! கண்ணனை வணங்குங்கள் அனால் உங்களின் குலத்தில் பிறந்தவன் என உரிமை கூறாதீர் என போராட வேண்டும் ! காரணம் தென் இந்திய திராவிட கண்ணனை இடையர்களின் குலத் தோன்றலை அவர்கள் எப்படி உரிமை கொண்டாடலாம் ? அவர்களும் நாமும் வேறு என நிருபிப்பதற்கு இது ஒரு முறை ! மற்றொரு முறை என்னவெனில் தென் இந்திய இடையர்குல மக்களிடையே கீழ் கண்டவாறு விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும் , அதாவது கண்ணபிரான் என்பவன் வட இந்திய ஆரிய யாதவன் , அவனுக்கும் முல்லை குடிகளாகிய இடையர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை ! அவனை வணங்குவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் , உரிமை கோரதீர் ? அவர் ஐரோப்பியாவில் இருந்து கைபர் போலன் கனவாய் வழியே ஆடு மாடுகளை மேய்க்க ஊடுருவிய ஆரிய இனக்குழுவை சேர்ந்தவன் ! என பிரசாரம் செய்யுங்கள் ! உங்கள் கூற்றுப்படி யாதவர்களும் இடையர்களும் வெவ்வேறு இனக்குழு எனில் , மேற்கண்ட இரண்டில் ஒன்று நிச்சயம் உண்மையாக இருக்க வேண்டும் ! அதை முன்னிறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் ! அதை விடுத்து தேவையற்ற மொழி பண்பாடு கலாச்சாரம் தொழில் போன்ற ஏற்ப்புடையதற்ற காரணிகளை நீங்களாக எடுத்துக்கொண்டு பயனற்ற பிரசாரத்தை செய்யாதீர் ! /// 

கண்ணபிரானைப் பற்றி மேலே குறிப்பிட்டுவிட்டோம். கண்ணபிரான் என்பது தமிழ்ப்பெயர் மட்டுமே. அதன் பெயரால் நீங்கள் குறிப்பிடப்படுபவர் முல்லைத்திணை தலைவன் மாயோன் என்றால் நமக்குப் பிரச்னையில்லை. ஆனால் அப்படிக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்வது வழக்கத்திலில்லை. அது கிருஷ்ணனைத்தான் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கிருஷ்ணன் என்பவன் ஆரியப் புராணங்களில் படைக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம். அவன் ஆரியன்தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கொள்ளத்தேவையில்லை. ஆடு மாடு மேய்க்கும் யாதவன் எவனும் ஹிந்து மதத்தில் பூணூல் அணிவதில்லை. அந்த வழக்கம் வடஹிந்திய யாதவர்களிடத்தில் இன்றைக்குமில்லை. மேலும் அவனது சிந்தனை; செயற்பாடு; கருத்துக்கள்; அவனை சித்தரிக்கும் பாங்கு எதுவும் பழங்கால தமிழர்களின் பண்பாட்டோடு ஒத்துப்போகவில்லை. அவனைப் பற்றிய எந்தவொரு குறிப்பும் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. சமணமும் பௌத்தமும் வீழ்ந்து சைவமும் வைணவமும் எழுந்த பின்னரும், தமிழில் பக்தி இலக்கியம் தோன்றிய பின்னரும்தான் அவனைப் பற்றின குறிப்புகள் வருகிறது. இதுமட்டுமன்றி யது என்பவனைப் பற்றிய எக்குறிப்பும் தமிழில் கிடையவே கிடையாது. காடும் காடு சார்ந்த நிலப்பரப்பான முல்லை நிலப்பரப்பில் மேய்ச்சல் தொழிலை மேற்கொண்டு வாழ்ந்த இடையர்களின் தலைவனான மாயோன் தமிழன்தான், ஆரியனில்லை. (ஆரியரல்லாதோர் என்பதைக் குறிப்பிடுவதே திராவிடம்). மலைகளே இல்லாத வட ஈழம் இன்றைக்கும் முல்லைத்தீவு என வழங்கபடுவது அவ்வரலாற்றின் சாட்சி. 

அடுத்ததாக குலப்பெயர்கள் என்கிறீர்கள். “இடையன் / யாதவன்” என்ற பெயர்களுக்கான வரலாறை நாம் கசடற தெளிந்தாலே ஏராளமான உண்மைகள் விளங்கும். பலவகையிலும் இந்த பெயர்களுக்கு ஒற்றுமையில்லை என்பதை ஆணித்தரமாக நிறுவ முடியும். அதை பிறகு தனியான பதிவுகளில் பார்ப்போம். (கட்டாயம் பதியப்படும்) 

மரணத்தின் மீதான பயமும், வாழ்வின் மீதான ஆசையும், அறியாமையும் ஒருவனுக்கு கடவுளை அறிமுகப்படுத்துகின்றன. மன தைரியம் உள்ளவனிடம் அவரால் உயிர்வாழ முடியாது. எல்லோரும் கடவுளுக்கும் ஒரு வரையறை வைத்திருக்கிறார்கள். கோழிக்கறியும் ஆட்டுக்கறியும் வாழ்நாள் முழுதும் கட்டாயமாக உண்ணக்கூடாது என மிகத்தீவிரமான கட்டுப்பாடு எழுந்தாலே கடவுள் காணாமல் போய்விடுவார். அவ்வப்போது தன் வசதிக்கேற்ப விதிமுறைகளைத் தளர்த்திக்கொண்டுதான் கடவுளையும் காப்பாற்றிவருகிறார்கள் மக்கள். ஒரு குழந்தையை பிறப்பிலிருந்தே அச்சமூட்டாமல் மன தைரியத்தோடு வளர்த்தால் அது ஒருபோதும் கடவுளிடமும் மதங்களிடமும் தஞ்சமடையாது. இயல்பிலேயே அவ்வாறு இல்லாமல்போவதால்தான் கடவுளை வணங்கவேண்டிய கட்டாயத்திற்கு ஒரு மனிதன் ஆளாகிறான். எதற்காக நாம் கடவுளை வணக்குகிறோமோ அதன்மீதான நம் அறியாமை விலகும்போது அவரும் விலகிப்போய்விடுவார். நோய் வந்ததும் கோயிலுக்குபோன காலம் மாறி கோயிலைக் கடந்து மருத்துவமனைக்கு செல்வதும், சக்திவாய்ந்த சாமிக்கு கோயிலைக் கட்டி வாசற்கதவு வைப்பதும் கதவைப் பூட்டுவதும்தான் யதார்த்தமான வாழ்வியல். தன் சுய விருப்பு வெறுப்புகளை தொந்தரவு செய்யாத வரையறையோடு உள்ளவரைதான் கடவுளுக்கும் மதிப்பு மரியாதை. அது இருக்கிறதோ இல்லையோ என்று தெரியாமல்போனாலும், 'நமக்கு எதற்கு வம்பு? ஒரு கும்பிடு போட்டு வைப்போம்' என்பதுதான் இங்கு பலரது பக்தி. இப்படியாக நம் மக்களுக்கும் ஒரு கடவுள் தேவைப்படுகிறார். பழந்தமிழர்களுக்கு அது மாயோனாக இருந்தது. அவர் நம் முன்னோர்களிடையே சிறப்பாக வாழ்ந்தவராக இருக்கலாம். பின்னர் சாதிக்குழுக்களின் தொகைப் பெருக்கத்தால்தான் பங்காளி குழுக்கள் உருவானது. ஒவ்வொரு பங்காளி குழுக்களுக்கும் ஒரு குலதெய்வம் உருவானது. இத்தெய்வம் பெரும்பாலும் பெண் தெய்வங்களே. நாம் ஒரே சாதிக்குழு என்றாலும் தமிழர்களில் ஒரு சாதிக்கு ஒரே குலதெய்வ வழிபாடு என்பது இன்றைக்கு கிடையாது. மாறாக ஒவ்வொரு பங்காளி குழுக்களுக்கும் ஒரு குலதெய்வ வழிபாடு இருக்கும். குழந்தைகளுக்கு காதுகுத்து எல்லாம் இங்கேதான் நடத்துவார்கள். ஏனைய சுப காரியங்களும் இப்படித்தான். நாளடைவில் திணைத் தெய்வ வழிபாடு இப்படி குலதெய்வ வழிபாடாக மாறியது. (கண்ணபிரான் என்பவர் குலதெய்வம் அல்லர். அவர் பெருந்தெய்வ வழிபாட்டுக் கடவுள்.) வாழ்ந்தவர்களை மனதில் நினைத்து மதித்து மரியாதையை செலுத்திய தமிழர் வழிபாட்டில், அர்த்தம் தெரியாமல் மந்திரங்களை சொல்லி வணங்கும் முறை ஏற்பட்டதுபோல் நாளை நம் காலத்திலும் பலவும் மாறலாம், மறையலாம். பழந்தமிழர்களின் வழிபாட்டில் ஒரு நேர்மை இருந்தது. உற்பத்திப் பொருட்கள் அதிகமாக விளைந்தபோதே திருவிழாக்கள் ஏற்படுத்தப்பட்டன. பின்னாட்களில் அது சிலரின் சுயநலத்துக்காக மாற்றப்பட்டது. போதிய பொருளாதார கட்டுமானம் வகுத்துக்கொள்ளாத இச்சமூகம் இன்று லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து திருவிழாக்களை விமரிசையாக செய்வதொன்றையே வருடாவருடம் மாபெரும் நோக்கமாக கொள்ளும்போது அதை மேலும் ஆதரிப்பது நன்மையா? அறிவியல் வளர்ந்த காலகட்டத்திலும், எல்லாவற்றுக்கும் இயற்கையை பிரமித்து நின்ற ஆதிமனிதனின் பல புதிர்களுக்கு விடை தெரிந்த இக்காலகட்டத்திலும் பக்தி என்ற பேரில் கோயில் பணிகளுக்காகவே தங்கள் ஆற்றலை செலவழிக்கும் இளைய சமுதாயம் வேறெங்காவது இருக்கிறதா? இதனால் அறியாமை வளர்கிறதா? நீங்குகிறதா?

தமிழர்கள் மூத்த இனம் என்பது வரலாறு அறிந்ததே. அப்படியிருக்கையில் நம் வரலாறை வடக்கத்தியர்களுக்கும் பிற மொழிக்காரர்களுக்கும் எடுத்துச் சொல்லி நம் அடையாளங்களையும் சங்ககால இலக்கிய நீதிக்கருத்துக்களையும் குறளையும் பெருமையாக அவர்கள் ஏற்கும்படி பரப்புரை செய்வதை விடுத்து, நம் வரலாறுகளின் மீது துளி அக்கறையுமின்றி மூடி புறந்தள்ளி அடுத்தவன் அடையாளத்தை பூசிக்கொள்வதுதான் அறிவுடைமையோ? அடுத்தவர்களுக்கு நம் வரலாற்றை எடுத்துச் சொல்லாவிடினும் அடுத்தவர் அடையாளத்தை நம் மக்களின் மீது வளர்த்தெடுக்க துணைபோகாமல் இருப்பதாவது நம் முன்னோர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியன்றோ? 

எது விழிப்புணர்வு? எங்கிருந்து உருவாகும் விழிப்புணர்வு? அறிவுக்கு ஒவ்வாத மடமைகளை ஊற்றாய் வெளிக்கொணரும் மதக்கருத்துக்களையும் புராணப் பித்தலாட்டங்களையும் நம்பி பின்னால் சென்று பரப்புவதா பயனுள்ள பிரச்சாரம்? தமிழ்ப் பழங்குடி சமூகத்தின் சொந்த அடையாளங்களை காக்க முற்படுவதா பயனற்ற பிரச்சாரம்? 

பதிவேடுகளில் “யாதவர்” என நம்மை அரசாங்கம் அடையாளப்படுத்தியாகிவிட்டது. இனி அதை மாற்றுவது கடினம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அப்பெயருக்கு ஆபத்து வரப்போவதில்லை. அந்த அடையாளம் இருக்கவே செய்யும். ஆனால், “ஆயர் – கோனார் -இடையர்” என்ற அடையாளங்களை காப்பாற்றப்போவது யார்?

ஒரு போராட்டம் எப்போது வலுப்பெறும்?

முதலாளிகளும் பணக்காரர்களும் மனிதாபிமானவற்றவர்களும்தான் சமூகத்தை தீர்மானிக்கிறார்கள். கடவுளும் அதை காக்கும் மதமும் அவர்களுக்கு அடியாளாய் உதவி செய்கிறது. எல்லாமே கடவுளாலும் விதியாலும்தான் நடக்கிறது என்பதை ஒருவன் நம்பும்போதே அவன் எந்தவொரு போராட்டத்தின் மீதும் நம்பிக்கையற்றவனாக ஆகிறான். போராடும் எண்ணமே அவனுள் எழாதபோது முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும் மதவாதிகளுக்கும் தானாகவே இன்னும் பலம் கூடுகிறது. போராடும் எண்ணமில்லாத சமூகம் ஒட்டுமொத்தமாக அடிமையாகிறது. என்னதான் கொடுமை நடந்தாலும் விதியின் பேரால் தனக்குத்தானே ஒரு நியாயம் கற்பித்துக்கொள்ளும் மனநிலைகொண்ட தலைமுறை உருவாகிறது. கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஈடாய் நாத்திகம் ஓங்கும்போதுதான் போராட்டமும் புரட்சியும் வெளிப்படுகிறது. இவை ஒழியாத எந்தவொரு சமூகத்திலும் தீவிர போராட்டங்கள் வெடிக்க சாத்தியமில்லை. "கவலைப்படாதீர்கள், நம் மதம் இருக்கும்வரையில் இந்த மண்ணில் கம்யூனிசப் புரட்சி வராது" என்று பார்ப்பனர்கள் கூட்டத்திலே ராஜாஜி பேசியது சிந்திக்கத்தக்கது. ஒரு சமூகம் தனது இந்த நிலைக்கு யார் காரணமோ எது காரணமோ அதை எதிர்த்து போராட்டத்திற்கு தயாராகாமல் விதியின் மீது கவனமும் நம்பிக்கையும் வைத்தால் எந்த மாற்றம்தான் சாத்தியப்படும்? தலைவிதியை மறுக்கும்போதே போராட்டங்கள் வலுப்பெறும். நாத்திகமே தலைவிதியை மறுக்கவைக்கும். அறியாமையில் கிடக்கும் மக்களுக்கு சீரிய சிந்தனைகளே பாதுகாப்பு. ஒரு சமூகத்தின் புரட்சி அச்சமூகத்தில் வாழும் முற்போக்குவாதிகளைப் பொருத்ததே. அல்லது கடவுள் மீதும் தலைவிதி மீதும் நம்பிக்கை வைக்காதவர்களைப் பொருத்ததே. மதத்துக்கும் கடவுளுக்கும் ஆபத்து நேரும்போது மட்டுமே ஒரு மதவாதி போராடுகிறான். இதன் உளவியல் என்னவெனில், இவ்விரண்டின் மீதும் அவனுக்கு நம்பிக்கை வராதபோது அவன்கூட போராட்டத்தைத்தான் நம்புகிறான். ஆக போராட்டம் என்பது எதன் மீதும் நம்பிக்கையற்று நம்மைப் போன்ற உணர்வாளர்களின் ஆற்றலும் சிந்தனையும் ஒன்றுபடும்போதுதான் வலுப்பெறுகிறது. போராடினால் மட்டுமே எதையும் மாற்ற முடியும் என்பதே மிகத் தெளிவான உண்மை. எனவே உங்கள் நம்பிக்கைகளை உங்கள் சிந்தனையின் மீதும் செயல்பாட்டுகளின் மீதும் வையுங்கள். போராட ஒன்றுகூடுங்கள்...!

கை கோர்த்துச் செல்

கடவுளை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால் உன்னால் ஒருபோதும் எந்தவித போராட்டத்திற்கும் தயாராக முடியாது. உனக்காக உழைக்க போராட வருபவர்களோடு கை கோர்த்துச் செல். தனித்தனியாக உன் ஆற்றலை வீணாக இழக்கவேண்டாம். ஏதாவதொரு அமைப்பில் உடனே பங்கெடு. அவர்களோடு சேர்ந்து போராடு. சொந்தங்களோடு ஒன்று சேர்ந்து சாதி, இல்லையேல் உனைப் பெற்றதெததற்கு இச்சாதி?

நோக்கம் ஒன்றேயெனில் இத்தனை அமைப்புகள் ஏன்?

நம் சமூகத்திற்காக அமைப்புகள் நடத்தும் பலரும் தங்கள் அமைப்புகளில் சேர விருப்பமுள்ளவர்களின் தகவல்களை தெரிவிக்குமாறு அடிக்கடி முகநூலில் அறிவிக்கிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் அவ்வாறே அங்கே வந்து தங்களைப் பற்றி தெரிவிக்கிறார்கள். இது தவறில்லைதான், ஆனால் அதற்கு முன் படித்த இளைஞர்களாகிய நாம் யோசிக்க வேண்டியது என்னென்ன?

1. அமைப்பு தொடங்கப்பட்டதன் காரணம் என்ன?

2. அமைப்பின் குறிக்கோள் என்ன?

3. அமைப்பின் தலைமை யார்? அவர் விவரம் என்ன? அவர் என்ன வேலை செய்கிறார்? வருமானம் என்ன? பொருளாதார அரசியல் பின்னணி என்ன? நன்னடத்தை உடையவரா? உண்மையிலேயே யாதவர்தானா? உள்ளூரில் அவருக்கு மதிப்பிருக்கிறதா? பிறரை வழிநடத்தும் தகுதியும் திறமையும் அறிவும் தெளிவும் அக்கறையும் இருக்கிறதா? யாருக்கேனும் அரசியல் அடியாள் வேலைக்காக செயல்படுகிறாரா? இதற்கு முன்னர் இச்சமூகத்திற்காக அவர் செயல்பாடு என்ன?

4. தலைமையுடன் செயல்படுபவர்கள் யார்? அவர்களின் விவரம் என்ன?

5. அமைப்பு எப்போது தொடங்கப்பட்டது? எவ்வளவு பேர் இணைந்திருக்கிறார்கள்? இதுவரையில் அவர்களின் செயற்பாடுகள் என்ன?

6. இதற்கு முன் தொடங்கப்பட்டுள்ள அமைப்புகளில் ஏன் அவர்கள் இணையவில்லை? இதற்காக சொல்லப்படும் காரணங்கள் உண்மையா?

7. நம் மக்களின் நடைமுறை பிரச்னைகளுக்கு இவர்களிடம் உண்மையிலேயே தீர்விருக்கிறதா?

8. சாதியால் இவர்களுக்கு லாபமா? இவர்களால் சாதிக்கு லாபமா?

9. எதையும் சட்டரீதியாக எதிர்கொள்ளும் வலிமை இவர்களிடம் இருக்கிறதா?

10. எச்சமூகத்திடமும் பகை பாராட்டாமல் சாதுரியமாக காரியம் சாதிக்கும் விவேக அரசியல் ஞானம் உள்ளவர்களா? அல்லது கற்பனாவாத / வாய்ச்சொல் வீரர்களா?

11. தியாக மனப்பான்மை உள்ளவர்களா? நம்பி வரும் மக்களையும் இளைஞர்களையும் சுயலாபத்திற்காக அடகுவைக்காத பற்றுடையவர்களா?

இப்படி இன்னும் ஏராளம் சிந்திக்க வேண்டியுள்ளது. பலரையும் நம்பி நம்பி கடந்த காலத்தில் நாம்பட்ட அவமானங்கள் ஏராளம். இதனால் கிராமங்களில் நம் மக்களுக்கு சங்கமென்றாலே நம்பிக்கையற்றதாகிவிட்டது. மக்களின் நம்பிக்கை குலையவும் ஒற்றுமை வராமல் போகவும் பழைய தலைமைகளுக்கும் சங்கங்களுக்குமே பங்குண்டு. இனி ஒரு நல்ல வலுவான தலைவன் உண்மையிலேயே தோன்றினால்கூட யாரையும் அடையாளம் கண்டு ஆதரிக்குமளவுக்கு மக்கள் தயாரில்லை. யாருடைய பின்னணியும் நாம் அறியாமல் விடுவதால்தான் யாதவர் அல்லாதவர்களும் வேற்று மொழிக்காரர்களும் சுலபமாக நம்மை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

மேலும் அவரவரின் தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் பகிர்வது சரியானதல்ல. ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் தனிச்செய்தியில் விவரம் தெரிவியுங்கள், பெறுங்கள். இதைக்கொண்டு யார் வேண்டுமானாலும் உங்கள் முகவரியையும் கைபேசி எண்ணையும் தவறாகவோ போலியாகவோ பயன்படுத்தக் கூடுமன்றோ? தலைமையென்பது ஒவ்வொரு செயலிலும் கூர்மையான கவனத்தோடு நடந்துகொண்டால் நல்லது.

நன்றி நண்பர்களே. 
தயவுகூர்ந்து பலர் அறிய இதை பகிருங்கள்...

இதையும் சொல்கிறது மகாபாரதம்...!

அரச மாளிகையில் ஆரியப் பார்ப்பனர்களுக்கு விருந்து படைப்பதற்கென்றே 2000 சமையற்காரர்கள் இருந்தனர். நாளொன்றுக்கு 2000 பசுக்கள் வீதம் கொல்லப்பட்டு, அந்த இறைச்சியை ஆரியப் பார்ப்பனர்கள் அதிலும் விரும்பி உண்ணவே, சமைத்த கறி பற்றாமல் போகவே சூப் செய்து கொடுத்து சமாளித்தார்கள் என்று மகாபாரதம் கூறுகிறது. 

(துரோணபர்வம் 67-1-2)


மேலும் ஆரிய பார்ப்பனர்கள் உண்பதற்காகக் கொல்லப்பட்ட பசுக்களின் தோல் குவியலாகப் போடப்பட்டு, அவற்றிலிருந்து கசிந்த நீர் ஆறாக ஓட அதற்கு "சர்மனவதி" என்ற பெயர் வந்தது. 

(சர்ம-சருமம், தோல். வதி-வெளிப்பட்டு ஓடுதல்)

"நான்கு வேதங்கள்" ? - சில தகவல்கள்

1. ரிக்
ஆரியர்கள் தாங்கள் வணங்கிய காற்று, நீர், இடி, மழை போன்ற இயற்கை சக்திகளைப்
போற்றி பாடிய பாடல்கள் அடங்கியது.


2. சாமம்
ரிக் வேதத்தை இசையுடன் பாட ஏற்படுத்தப்பட்டதே சாம வேதம்.

3. யஜுர்
தாங்கள் வணங்கிய இயற்கை சக்திகளுக்கு சடங்கும் யாகமும் செய்யும் முறைகளை 
விளக்குவதே யஜுர் வேதம்.

4. அதர்வண்
ஆரியர்களின் முற்கால வாழ்க்கையையும் பிரார்த்தனைகளையும் உள்ளடக்கியது 
அதர்வண வேதம்.

உண்மை இப்படியிருக்க, வேதம் என்றால் ஏதோ இந்த உலகையே வாழ வைக்கும் ஆதாரமாகவும், அதில் இல்லாததே இல்லை என்பது போலவும், அது இறைவனுக்கே ஜீவாதாரம் என்றும் கதையளக்கிறார்கள்.

தமிழன் திருவள்ளுவனின் குறளின் ஓரமாவது நிற்க முடியுமா இவை?

- மஞ்சை வசந்தன்

மந்திரங்கள் பொய்யா?

மந்திரத்தால் மாங்காய் வரவழைக்க முடியுமென்றால் மாந்தோப்பு எதற்கு? மந்திரங்கள் உண்மையென்றால் மந்திரவாதிதான் உலகை ஆளுவான். ஆனால் அவன் அரிசிக்கும் பணத்திற்கும் ஏன் நம்மிடம் வருகிறான் என்பதை சிந்திக்க வேண்டும்.

மேல் ஏழு லோகம், கீழ் ஏழு லோகம் இருக்கிறதா?

ஒரு காலத்தில் இமய மலையிலிருந்து கன்னியாகுமரி வரையுள்ள பரப்பே உலகம் என்று நம் மக்கள் நம்பினர். அதனால்தான் பார்வதியின் திருமணம் இமய மலையில் நடந்தபோது மக்கள் அதிகம் அங்கு காணச் சென்றதால் பூமியின் வடபாகம் சாய்ந்துவிட்டது என்று அகத்தியரை தென்பாகத்திற்குச் சென்று பாரத்தை ஈடுகட்டச் செய்ததாகப் புராணம் எழுதினர். அப்படிப்பட்ட காலகட்டத்தில் கற்பிக்கப்பட்ட கற்பனையே இந்த மேலேழு கீழேழு லோகங்கள். இதில் எந்த உண்மையுமில்லை என்பதோடு இன்னமும் நம்பிக்கொண்டிருப்பது அறியாமை.

சிந்தனையாளர்களுக்கு அழகா?

நாம் சிந்திக்கத் தொடங்கிய நாட்களிலிருந்து இன்றுவரை எதையெதையோ சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு என்னவெல்லாம் கற்றுக் கொடுக்கப்பட்டதோ அதே வட்டத்துக்குள் நின்றுகொண்டு இந்த உலகையும் வாழ்வையும் கவனித்துக்கொண்டிருக்கிறோம். கொஞ்சமாவது நாம் நம்பிக்கொண்டிருப்பவைகளுக்கு எதிரான கருத்துக்களை தேடிப் படித்தால்தானே நாம் சரியானவற்றை கற்றிருக்கிறோமா அல்லது ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோமா என்று தெரியவரும்..! மதங்களின் பெயரால் நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்டவைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அந்த வட்டத்திலேயே இருப்பது சிந்தனையாளர்களுக்கு அழகா? நம் ஆறாவது அறிவுக்குத்தான் மரியாதையா? அந்த வகையில் தயவுசெய்து உங்களுக்கு சந்தேகம் எழுகின்ற எந்தவிதமான கருத்துக்களையும் ஆராயுங்கள். அவ்வகையில் “மஞ்சை வசந்தன்” என்பவர் எழுதிய புத்தகங்கள் உங்களுக்கு பலவகையில் உதவக்கூடும். ஒருமுறை தேடிப் படித்துப் பாருங்கள்... ஏற்புடையவை அல்லவென்றால் ஒதுக்கிவிடுங்கள். குறைந்தபட்சம் நம் மதத்தில் மூட நம்பிக்கை வளப்பவர்களையாவது எதிர்க்கலாம், அடையாளம் காணலாம்....

செப்டம்பர் 17 - தந்தை பெரியார் பிறந்த நாள்

யார் எதைச் சொன்னாலும் அது கடவுளால் சொல்லப்பட்டதாக நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டாலும்கூட அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என தன் சிந்திக்கும் ஆற்றலால் அதன்மீது கேள்வி எழுப்பி தெளிவடைந்து பின்னர் சுய முடிவுக்கு வரவேண்டுமென பரப்புரை செய்து, அவ்வாறே மூடநம்பிக்கைகளுக்கெதிராக தம் வாழ்நாளெல்லாம் ஆதாயம் கருதாமல் தமிழ் மக்களுக்காக தொண்டு செய்த அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் இன்று.

நன்றி உணர்வுடன் அவரை போற்றுவோம். அப்படி அவர் நமக்காக என்னதான் கிழித்துவிட்டார் என எண்ணினால் சற்றேனும் அவர் சிந்தனைகளைப் படிப்போம்.

இல்லாவிடில் கொண்டாட்டம்தான்

மூடக் கருத்துக்களை பரப்புகின்றவர்களுக்கு எதிராக மக்கள் திரண்டெழுந்து கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தால்தான் எதிர்காலத்திலாவது சாமான்ய மக்களின் வாழ்க்கை அறிவிலும் பொருளாதாரத்திலும் மேம்படும். ஏமாற்றும் எத்தர்களின் மோசடிகளும் வெளிப்படும். குறைந்தபட்சமான கேள்வியை எழுப்பியாவது தெளிந்து பின்னரே ஒன்றை ஏற்கும் தன்மை வளர வேண்டும். இல்லாவிடில் எப்போதுமே எல்லா மதங்களுக்கும், எல்லா மதவாதிகளுக்கும், எல்லா பிற்போக்குவாதிகளுக்குமே படு கொண்டாட்டம்தான்.

இடைக்காட்டுச் சித்தனின் பேரன்கள் நாம்

பிறரது வரலாறுகளையெல்லாம் நாம் படிக்கிறோம். நம் வரலாறுகளை யாரேனும் படிக்கிறார்களா? ஏன் படிப்பதில்லை? நம் வரலாற்றின் மீது நமக்கே அக்கறை இல்லாமல் போனால் பிறருக்கு எப்படி அது தெரியவரும்? அடுத்தவன் அடையாளத்தை சுமந்துகொண்டு இத்தலைமுறையோடு நம் அடையாளங்களை தானாய் அழிந்துபோக விடுவதுதான் நம் முன்னோர்களுக்கும் சான்றோர்களுக்கும் நாம் அளிக்கும் மரியாதையா? நம் இளைஞர்களின் கல்வியறிவு இதைக்கூட அலசிப்பார்க்க தகுதியற்றதா? நம் பாட்டன் முப்பாட்டன்களின் அடையாளங்களென்ன அவமானமானதா? பல ஞானச் சித்தர்களையும் புலவர்களையும் சான்றோர்களையும் தந்த இந்த தமிழ் இடைச்சி மக்களின் சிந்தனைகளில் மயக்கமும் வேற்றுமொழி அடையாளமும் நுழைவது நியாயமா? நம் தமிழின் ஆதிச் சமூகத்திற்கு பாதியில் வந்த அடையாளங்கள் எதற்கு? "ஆயர் இடையர் கோனார் "அடையாளங்களை நாமன்றி யார் சுமப்பார்? நமையன்றி யார் வளர்ப்பார்?

என்ன குறை?

தன் சொந்த அடையாளங்களையும் தொன்மையான வரலாறுகளையும் துளியளவும் கேள்விப்படக்கூட தயாராக இல்லாமல், கற்பனையான புராண கதைகளை வரலாறு என்று பெருமையாய் எண்ணி வேற்று மொழி அடையாளத்தை நம் இளைஞர்கள் தூக்கி சுமப்பது ஏன்? தமிழர்களின் அடையாளங்களில் என்ன குறை கண்டீர் நண்பர்களே...

சடங்கும் மரியாதையும்

தன் பெற்றோர்களுக்கு சாப்பாடுகூடப் போடாமல் அடித்து விரட்டும் மகன் தன் திருமணத்தின்போது தாய் தந்தையரை நிறுத்தி வைத்துக் காலைக் கழுவி வணங்குவான். அவன் அதை ஒரு சடங்காகச் செய்கிறானே தவிர உண்மையிலேயே அவன் பெற்றோரை மதிப்பதில்லை. இவ்வாறான சடங்குகளால் என்ன பயன் ஏற்பட்டுவிடும்? மரியாதை என்பது காலில் சந்தனம் பூசி வணங்குவதிலா? உண்மையிலேயே பெற்றோரை மதித்து முறைப்படி பேணுவதிலா?

தமிழர்களின் தனி அடையாளங்கள்

உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்கள் தனித்த அடையாளம் மிக்கவர்கள். அவர்களுக்கு ஒரே மொழி, ஒரே பண்பாடு உண்டு. அறிவை மயக்கும் பல்வேறான மத உணர்வுகளாலேயே தமிழர்களின் தனி அடையாளங்கள் செல்லரித்துக் கொண்டிருக்கிறது.

நம் பகவான் கிருஷ்ணனின் அருள்

சர்வ பலம் பொருந்திய பகவான் கிருஷ்ணரே நம் சாதியில் பிறந்த பெரும் பாக்கியத்தால்தான் பீஹாரிலும் உ.பி-யிலும் வாழும் யாதவர்கள் இந்த 
நாட்டிலேயே கல்வியறிவிலும் (?) பொருளாதாரத்திலும் (?) முதலிடத்தில் இருக்கிறார்கள்.

எந்திரங்கள் காவு கேட்பதேன்?

எந்திரங்கள் உயிரற்றவை. அதற்கு உணர்வுகளோ சிந்தனைகளோ கிடையாது. அப்படியிருக்க அது எப்படி காவு கேட்கும்? காவு கொடுக்கப்படுவதை அவை உணரப்போவதும் இல்லை, உணர்ந்து அமைதி அடையப்போவதுமில்லை. போலித்தனமான மனநிறைவே இதன் மூலகாரணம்.

அறிவிற்கு அழகு

முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக அதை அப்படியே ஏற்றுக் கொள்வதும் தவறு. முன்னோர்கள் சொன்னவை அனைத்தும் மூடத்தனமானவை என்று ஒதுக்குவதும் தவறு. எதையும் ஏன் என்று ஆராய்ந்து சரியென்றால் மட்டும் ஏற்கவேண்டும் என்பதே அறிவிற்கு அழகு.

நம் தலைமுறையிலேயே மாறிவிடுமா?

இடையர்களின் தமிழ் பூர்வீக வரலாறு வடக்கிருந்து வந்தேறியாக நம் தலைமுறையிலேயே மாறிவிடுமா?

வரலாறு அறியாத இடையர்கள் இந்த யாதவ கூற்றை நம்பலாம். அதற்கு காரணம் கடவுளே பிறந்துவிட்டார் என்ற பக்தி மயக்கமும் புராண நம்பிக்கையும்தான். யாதவ் என போடும் வடக்கிலிருக்கும் ஒருவனை கோனார் இடையர் என போடச்சொன்னால் முதுகெலும்பை உடைத்துவிடுவான். வரலாறு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் பிற மொழிக்காரனுக்கு இயற்கையாகவே அடிமையாகும் புத்தி ஹிந்திக்காரர்களிடம் இல்லை. அந்த வம்சம் இந்த வம்சம் என நீங்கள் சொல்லும் எல்லாக்கதைகளும் வைணவத்திற்கு அரசர்கள் மாறிய பிறகுதான் நுழைக்கப்பட்டது. இப்படி நுழைத்தவர்களுக்கும் அடையாளப்படுத்தியவர்களுக்கும் லாபமிருந்தது. மிகப்பெரும் மயக்கத்தில் ஆழ்ந்ததில் நமக்கு நட்டமாகியிருக்கிறது. இடையில் உருவான சக தமிழ்ச்சாதிகளெல்லாம் நம்மைப் பார்த்து வடக்கிருந்து வந்த வந்தேறிகள் என கை நீட்டப்போகும் காலம் வெகுதூரமில்லை. நம் வரலாறு அவனுக்கு தெரியாதது மன்னிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அவர்களிடம் எடுத்துச் சொல்லவாவது நமக்கு வரலாறு தெரியவேண்டாமா? நீங்கள் யாதவர் என்றே எண்ணிக்கொள்ளுங்கள். தமிழ் அடையாளங்களை மாற்றாதீர்கள்.

யாதவ நண்பர்களே...

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உங்களை அடையாளம் காட்டிக்கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பம். அதற்காக அதுவேதான் உண்மை மற்றவை பொய் என எண்ணாதீர். மாற்றுக் கருத்துக்களையும் உண்மை வரலாறுகளையும் ஆராயுங்கள். இடையர் சமூகத் தமிழ் உணர்வு அக்கறையாளர்களை ஆதரியுங்கள். உரிமையோடும் நட்போடும் விமர்சனம் வையுங்கள்.

ஆதியில் இடையர்களாக இருந்தவர்களின் வரலாற்றில் இடையில் யது எப்போது நுழைந்தான்? எல்லாவற்றுக்கும் மூத்த குடி தமிழ்க்குடி. நாடு முழுதும் இடையர் என பரவாமல் யாதவர் என பரவியது எப்படி? யது தமிழனா? சமஸ்கிருதத்திலும் ஏனைய பிறமொழி புராணங்களிலும் தமிழ் இடையர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கிறதா? ஏன் இல்லை? யதுவுக்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு?


ஆயர்கள், இடையர்கள், கோனார்கள்...!

இவைகளே நம் சமூகத்தின் உண்மையான பெயர்கள். இம்மூன்று பெயர்களும் தமிழர்களாகிய நமக்கே சொந்தம். இப்பெயர்களால் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள தயங்கும் நம் இளைஞர்கள் நம் தமிழர்களின் திணை வரலாற்றை படிக்கவேண்டும். நம் வரலாற்றை நாமே கட்டிக்காக்கவில்லை என்றால் நமக்காக வேறு எந்த மொழிக்காரர் அக்கறைப்படுவர்?

மிகையான புனைவுகளால் பயன் என்ன?


ஆதியில் நிர்வாணமாகத் திரிந்த மனித இனம் படிப்படியாகவே இன்றைய நாகரீக வளர்ச்சியை அடைந்தது. இயற்கையில் எந்தவொரு சமூகமும் வேறைதையும்விட விசேஷமல்ல. எல்லா ஜீவராசிகளுக்கும் இயற்கை பொதுவானது. ஆனால் இன்றைக்கு மனிதன் மட்டுமே தன் பிறப்பின் பெருமையை கற்பனைகளால் நிரப்பிக்கொள்கிறான். நாம் தற்போது எந்த அடையாளத்தால் அழைக்கப்படுகிறோமோ அதுவே போதுமானது. மிகையான எந்தவொரு புனைவுகளும் நம் ஆற்றலை வீண் வழிகளிலே திசைதிருப்பும். நாம் யார் என்ற வரலாற்றை தெளிவாக தெரிந்த இனத்தினால்தான் அங்கேயே தேங்கி நில்லாமல் வரலாற்றின் அடுத்த கட்டத்திற்கு நகரமுடியும்.


(படம் : திருவாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த தமிழர்கள்)

இடையன் என்று சொல்லுவோம்..!

வெட்டிப் பெருமைகளை பரப்பிக்கொண்டு இன்னொரு சாதிச்சங்க இளைஞர்களும் முகநூலும் இணையதளங்களும் எப்படியெல்லாம் இருந்தால் நமக்கு வெறுப்பு ஏற்படுமோ அப்படியெல்லாம் நாம் இருக்கவே கூடாது. அடிப்படை ஆதாரமற்ற பொய்யான வரலாறுகளும் கற்பனைக் கதைகளும் அதனால் உண்டாகும் பயனற்ற பெருமைகளும், ஒரு சமூகம் சூழ்ச்சிக்காரர்களிடம் ஏமாறவும் வீழவுமே வழி செய்யும். அறிவுக்கு ஏற்புடையவாறு நம் வரலாற்றைக் கற்றலும் அதை மிகைப்படுத்தாமல் பதிவதுமே நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் பெரும் தொண்டு. தமிழில் இடையில் உருவான சாதிக்குழுக்களே ஏராளம். ஆதியிலிருந்து இன்றைக்கும் அதே பெயரில் வாழும் இடையர்சாதிக் குழு மட்டுமே பழங்குடி. எந்த சாதிக்குழுவுக்கும் இல்லாத நம் தொன்மை அடையாளங்களை மறப்பதும் தவிர்ப்பதும் நியாயந்தானா? 

இடையன் என்று சொல்லுவோம்..!
தோள் உயர்த்தி நில்லுவோம்..!

ஓர் பணிவான வேண்டுகோள்

நண்பர்களே, நம் தமிழ் மண்ணின் மைந்தன் மாவீரன் அழகுமுத்துக் கோன் அவர்களின் பெயரை தயவுசெய்து அப்படியே பதிவேடுகளில் உள்ளவாறே பயன்படுத்துங்கள். கோன் என்பதை அவரவர் வசதிக்கேற்ப யாதவ் என மாற்றி எழுதாதீர். அம்மாவீரனுக்கும் அவரது வீர வரலாற்றுக்கும் இதுவே நீங்கள் செய்யும் முதல் மரியாதை. கற்பனை வரலாறுகளுக்கு நீங்கள் அளிக்கும் மரியாதையில் பாதியளவாவது முல்லைத்திணை இடையர்களின் உண்மை வரலாற்றுக்கு அளியுங்கள்.

பாதை மாற்றம் அவசியம் தேவை

30 வயதுக்குட்பட்ட நம் இளைஞர்கள் யாரும் திருவிழாக்களை முன்னெடுத்து நடத்துவதிலிருந்து விலகி அதே ஆற்றலை சுயதொழிலுக்காகவும் உள்ளூர் அரசியலுக்கும் பயன்படுத்த வேண்டும்.

இடையர் சமூகத்தின் அறிவார்ந்த நண்பர்களே...

இந்த சமூகத்து மக்களின்மேல் உங்களுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் இதுவரைக்கும் இவர்களுக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவைகளை எதிர் கேள்விகளால் ஆராய்ந்து பார்த்து சரி எது தவறு எதுவென அவர்களே சுயமாய் அறியும்படி அவர்களின் சிந்தனையைத் தூண்டுவதே நீங்கள் அவர்களுக்குச் செய்யும் பேருதவி. சுய சிந்தனையால் தானே அறிய முடியாதபடி பாமர ஏழைபாழைகளிடம் வளர்ந்து யாருக்கோ பயனளித்துக் கொண்டிருக்கும் கருத்துக்களையெல்லாம் நம் மக்களின் மூளைகளில் அடைகாத்து வளர்க்க நாமே ஏன் முண்டியடிக்க வேண்டும்? தயவுசெய்து பிற்போக்குத்தனமான கருத்துக்களை மேலும் மேலும் பரப்பி அடுத்த தலைமுறைக்கான அடிமைகளை மதவாதிகளுக்கு தயாரித்துக் கொடுக்க வேண்டாம். கற்பதின்பால் மக்களின் கவனத்தை திசைதிருப்புங்கள்... மாற்றங்களை நம் தலைமுறையிலேயே காணலாம்.

உண்மையான வரலாற்று அக்கறை

மொழி அடையாளம் தவிர்க்கப்படும்போது ஒரு சமூகத்தின் கலாச்சாரம் தாக்குதலுக்குண்டாகிறது. ஒவ்வொரு மொழி சார்ந்த மக்களாலேயே அவர்களுக்கொன தனித்தனி கலாச்சாரம் உருவாகிறது. பல்வேறு மொழிக்காரர்களுக்கு ஒரே கலாச்சாரம் இருக்கமுடியாது. ஒரளவு பொதுமையும் வல்லதின் தாக்கம் மட்டும் இருக்கக் கூடும். ஒரு இனம் மதம் வழியாக தன் கலாச்சாரத்தை காப்பாற்ற முடியாது. மொழி அடையாள வெறிதான்  உண்மையான வரலாற்று அக்கறை.

வேற்று மொழி அடையாளம் எதற்கு?

தமிழில் தண்ணீர் தெலுகில் நீலு மலையாளத்தில் வெல்லம் ஹிந்தியில் பானி அறிவியலில் H2O என்பது சரிதான். ஒவ்வொரு மொழியிலும் தண்ணீருக்கு ஒவ்வொரு பெயரென்பதும் உண்மைதான். இருக்கட்டும். தமிழர்கள் தண்ணீரை எதற்காக நீலு என்றும் பானி என்றும் மாற்றிச் சொல்ல வேண்டும். தெலுகர்கள் நீலுவை எதற்காக தண்ணீர் என்றும் பானி என்றும் வெல்லம் என்றும் மாற்றி அழைக்க வேண்டும். ஆனால் ஹிந்திக்காரர்கள் மட்டும் பானி என்றே வழங்கிக்கொள்ள வேண்டும். எல்லா விஷயத்திற்கும் எல்லோரும் எதற்கு ஹிந்திக்காரர்களிடம் அடிமையாக காட்டிக்கொள்ள வேண்டும்? சுய சிந்தனை வளரக்கூடாதா?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..!

யது என்பவர் யார்? 
எதற்காக அவர் பெயரில் ஒரு சாதி தோன்றியது? 
யது என்பவரைப் பற்றிய தமிழ் இலக்கியக் குறிப்புகள் யாவை?
தமிழர்களுக்கும் அவருக்குமான உறவு என்ன? 
வடமொழி தவிர்த்து பிற மொழிகளில் யதுவைப் பற்றி இருக்கிறதா? எந்த மொழியில்? 
அவரது பெருமையான வரலாறு என்ன? 
அவரால் தமிழர்களாகிய நமக்கு கிடைத்த பெருமைகள் என்ன?
இடையர் என்பது தனி நபரைக் குறிப்பதா? மதங்களைக்க 
குறிக்கிறதா? கடவுள் பெயரால் உருவானதா? 
யது என்பவரைப் பற்றி நம் முன்னோர்களுக்கு எப்போது தெரிந்தது? 
யாதவர்கள் என நீங்கள் ஏற்றுக்கொள்வது உங்கள் விருப்பம் எனில் அப்படி ஏற்றுக்கொள்ளாத நம் சகோதரர்களை பகையாகப் பார்ப்பது ஏன்? 
தமிழ் வரலாறுகளை அடையாளங்களை பாதுகாக்கப் போவது யார்?
அவர்கள் ஏற்கும்படியாக விளக்கம் சொல்ல முயற்சி செய்யாமல் விரோதமாகப் பார்ப்பது எதனால்? 
இடையர், கோனார் என்ற பெயர்கள் கேவலமா? அதற்குப் 
பெருமைகள் இல்லையா? அதை ஏன் தவிர்க்க வேண்டும்? இதனால் சாதிக்கு என்ன நட்டம்? 
வரலாறுகள் காலப்போக்கில் மறைவதும் மாறுவதும் மறப்பதும் வலி இல்லையா? 
இப்படி அக்கறைப் படுவதால் நம் சமூகத்திற்கு இழப்பாகிவிடுகிறதா?
தமிழின் பெருமையான மூத்த குடி எதற்காக தன் அடையாளத்தை வேறு புதுப்பெயரில் மாற்றிக்கொள்ள வேண்டும்?

காரணத்தை தெளிவாக சொல்லுங்கள். ஆர்வத்துடன் ஏற்று 
பரப்புவோம்.

எது ஆரோக்கியமானப் போக்கு?

பிற தமிழ்ச் சாதிக்குழுக்களைவிடவும் சங்க இலக்கியத்தில் இடையர்கள் பற்றிய செய்திகள் பல இடங்களிலும் பரவிக்கிடக்கிறது. ஆயர் என்ற நமக்குச் சொந்தமான வார்த்தையை இன்றைக்கு கிறித்தவ பாதிரிகள்தான் பயன்படுத்துகிறார்கள். நம் இளைஞர்களிடையே சுத்தமாக அதன் வழக்கும் வரலாறும் தெரியாமல் போய்விட்டது. ஆயர் என்ற வார்த்தை நம் உணர்வில் உயிரற்றுப் போய்விட்டது. ஐந்திணைகளில் நமக்கென தனியாக ஒரு திணையே படைக்கப்பட்டுக்கிறது. ஆனால் தமிழ் இடையர்கள் சமூகத்தின் மீது ஒரு பெரும் வரலாற்றுத் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் நாங்கள் இடையர்களில்லை என நம் இளைஞர்களே சொல்லிவிடுவார்கள் போலிருக்கிறது. இது உண்மையா எனக்கூட அறிய முயலாமல் இருப்பதும், அதைப்பற்றி எழுதுபவர்களை விரோதமாகப் பார்ப்பதும் ஒரு சமூகத்திற்கு ஆரோக்கியமானதா? இப்படி அக்கறைப் படும் நம் இளைஞர்களை அரவணைப்பது ஆரோக்கியமானதா?

இடையர்கள் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகள்

ஓர் இடையன் பாலைக் கொடுத்து அதற்கு ஈடாய் தானியத்தைப் பெற்றுக்கொண்டதை முதுகூத்தனாரின் குறுந்தொகைச் செய்யுள் விளக்குகிறது.

"பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாருடை இடையன்'' (குறு.221:3-4)

இடைச்சியர் நெய்யைப் பண்டமாற்று செய்யாமல், காசுக்கு விற்று அக்காசுகளைச் சேமித்து, குறிப்பிட்ட தொகை சேர்ந்த பின்னர் அக்காசுகளைக் கொடுத்துப் பசுவையும், எருமையையும் விலைக்கு வாங்கினர் என்பதை, பெரும்பாணாற்றுப்படை தெரிவிக்கிறது (பெரும்பாண்.164-166)

ஆயர்களின் உணவு குறித்து தமிழ் இலக்கியப் பதிவுகள்

ஆயர் உணவு

முல்லை நிலத்தில் வாழ்பவர்கள் ஆயர் ஆவார். காடும் காடு சார்ந்த நிலத்தில் வாழும் ஆயராகிய இடையர்கள் ஆடுமாடுகளைச் செல்வமாகக் கொண்டவர்கள். இவர்களுடைய உணவு காடுகளாகிய புன்செய் நிலத்தில் விளையும் தானியங்களே ஆகும். நண்டுக்குஞ்சுகளைப் போலக் காணப்படும் தினைச்சோறும் காலும் அவர்கள் உண்ணும் உணவாகும். இவ்வுணவைத் தாமும் உண்டு தம் விருந்தினருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர் என்பதை,

“மடிவாய்க் கோவலர் குடிவயின் சேப்பின்
இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவீர்” (166-168)

-என்ற பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது.
ஆடுகள் மேய்த்து வந்த ஆயர்கள் பாலுணவை அதிகம் உண்டனர். அவர்ளின் இருப்பிடத்திற்கு வந்தவர்களுக்கு பசும்பாலை உண்பதற்காக்க் கொடுத்தனர். இதனை,

“வேறுபுலம் படர்ந்த ஏறுடையினத்த
வளைஆன் தீம்பால் மிளைசூழ் கோவலர்
வளையோர் உவப்பத் தருவனர் சொரிதலின்
பலம பெறுநசையொடு பதிவயின் தீர்ந்தநும்
புலமபுசேண் அகலப் புதுவிர் ஆகுவிர்” (408-412)

-மலைபடுகடாம் குறிப்பிடுகின்றது. இவ்வரிகளில் ஆயர்பெருமக்களின் அன்புள்ளத்தைக் காணலாம். மேலும் அவர்கள் இரவில் பாலையும் பாற்சோற்றையுதம் உண்பார்கள். விருந்தினர்களுக்கும் கொடுப்பர் என்பதை,

“கல்லென் கடத்திடைக கடலின் இரைக்கும்
பல்யாட்டு இனநிரை எல்லினிர் புகினே
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவீர்” (415-417)

-மலைபடுகடாம் மொழிகின்றது.

ஔவையார்கள் என எத்தனைப் புலவர்கள் வாழ்ந்தார்கள்?

"வாதவர்கோன் பின்னையென்றான் வத்தவர்கோ னாளையென்றான்
யாதவர்கோன் யாதொன்று மில்லையென்றா--னாதலால்
வாதவர்கோன் பின்னையினும் வத்தவர்கோ னாளையினும்
யாதவர்கோ னில்லை யினிது"

ஒளவையார் என்று ஒருவர் அல்ல, பலர் இருந்தனர். சங்க காலத்தில் அதியமானோடு நட்புக் கொண்டிருந்த ஒளவையார் ஒருவர். இடைக்காலத்தில் தனிப் பாடல்கள் பாடிய ஒளவையார் இன்னொருவர். நல்வழி போன்ற அறநூல்களைப் பாடிய ஒளவையார் இன்னொருவர். கம்பர் காலத்தில் வாழ்ந்த ஒளவையார் மற்றொருவர். இப்படி குறைந்தது ஐந்து ஒளவை யார்களேனும் தமிழகத்தில் வாழ்ந்திருக்கவேண்டுமென்று தெரிகிறது. இக் காலத்தில் எல்லோரும் காமாட்சி, மீனாட்சி, அர்ச்சனா, கீர்த்தனா என்று பெயர் வைத்துக் கொள்வதைப்போலப் பழங்காலத்தில் ஒளவை என்பது யாவரும் வைத்துக் கொள்ளக் கூடிய பெயராக இருந்தது. இப்பாடலை இயற்றியவர் தனிப் பாடல்கள் பாடிய ஒளவையார். அவர் அநேகமாக கி.பி. பதினைந்தாம் பதினாறாம் நூற்றாண்டு அளவில் வாழ்ந்திருக்கலாம். இக்காலத்தில் வைணவ மரபுகள் தமிழகத்தில் நுழைந்திருந்தது.

புலவர்களும் புராண இலக்கியங்களும்...

பொதுவாக நடந்ததை அப்படியே எழுத புலவர்கள் என்பவர்கள் வரலாற்று ஆசிரியர்கள் அல்லர். தங்களின் வறுமையைப் போக்கவும் தங்களின் திறமையை வெளிக்காட்டவும் எல்லா நிகழ்வுகளையும் தங்கள் கற்பனைப் புலமையை அதிகம் கூட்டியே பாடுவர்கள். அது தவறல்ல அதை அப்படியே நாம் நம்பிக்கொண்டிருப்பதுதான் தவறு. எதன்மீது நமக்கு அதிக நாட்டம் ஏற்படுகிறதோ அதை அலசிப் பார்ப்பது ஆரோக்கியமானதுதானே..!

எத்தனைப் பேருக்குத் தெரியும்?

1931 வரை நம் முன்னோர்கள் யாருக்கும் யாதவர் என்ற வார்த்தையே தெரியாது. தமிழில் ஒளவையார் என மூவர் இருந்திருக்கிறார்கள். அக்காலப் புலவர்கள் பலரும் அப்போதே வடமொழியை ஆதரித்திருக்கிறார்கள். அதனால் வந்த விளைவே இந்த வரலாற்று திரிபுகள். சங்ககால தமிழிலக்கியங்களில் நம் பெயர் ஆயர், இடையர், இடைச்சியர், கோவலர்தான். புராணப் பாடல்கள் தவிர எங்கேயும் யாதவன் என இலக்கியங்களில் காணமுடியாது. ராமனுக்கு திருமணம் நடந்தபோது 12 வயது சீதைக்கு 6 வயது என வடமொழி ராமாயணம் சொல்கிறது. அதிலும் நாலைந்து ராமாயணங்கள் எழுதப்பட்டுள்ளது. தமிழிலேயே இரண்டு. ராமன் இறுதியில் ஆற்றிலிறங்கி தற்கொலை செய்துகொண்டான் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?

Wednesday 24 September 2014

உங்கள் தலைவன்

"யார் பேரைச் சொன்னால் உங்கள் எதிரிகள் குலை நடுங்குகிறார்களோ அவனே உங்கள் தலைவன்" - சேகுவேரா

ஒருமுறை தேடிப் படித்துப் பாருங்கள்...

நாம் சிந்திக்கத் தொடங்கிய நாட்களிலிருந்து இன்றுவரை எதையெதையோ சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு என்னவெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டதோ அதே வட்டத்துக்குள் நின்றுகொண்டு இந்த உலகையும் வாழ்வையும் கவனித்துக்கொண்டிருக்கிறோம். கொஞ்சமாவது நாம் நம்பிக்கொண்டிருப்பவைகளுக்கு எதிரான கருத்துக்களை தேடிப் படித்தால்தானே நாம் சரியானவற்றை கற்றிருக்கிறோமா அல்லது ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோமா என்று தெரியவரும்..! மதங்களின் பெயரால் நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்டவைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அந்த வட்டத்திலேயே இருப்பது சிந்தனையாளர்களுக்கு அழகா? நம் ஆறாவது அறிவுக்குத்தான் மரியாதையா? அந்த வகையில் தயவுசெய்து உங்களுக்கு சந்தேகம் எழுகின்ற எந்தவிதமான கருத்துக்களையும் ஆராயுங்கள். அவ்வகையில் “மஞ்சை வசந்தன்” என்பவர் எழுதிய புத்தகங்கள் உங்களுக்கு பலவகையில் உதவக்கூடும். ஒருமுறை தேடிப் படித்துப் பாருங்கள்... ஏற்புடையவை அல்லவென்றால் ஒதுக்கிவிடுங்கள். குறைந்தபட்சம் நம் மதத்தில் மூட நம்பிக்கை வளப்பவர்களையாவது எதிர்க்கலாம், அடையாளம் காணலாம்....

எங்கே இருக்கிறோம்? எப்படி இருக்கிறோம்?

இலங்கையில் சிங்கள இனத்திலும் ஆடு மாடு மேய்க்கும் இடையர்கள் இருக்கலாம். அரேபியாவிலும் ஆடு மாடு ஒட்டகம் மேய்க்கும் இடையர்கள் இருக்கலாம். இப்படித்தான் உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் கால்நடைகளை மேய்க்கும் இடையர்கள் இருக்கிறார்கள். தொழிலால் அவர்களும் நமக்கும் ஒற்றுமை இருக்கலாம். ஆனால் அவர்கள் வேறு, நாம் வேறு. அவர்களின் பெருமைகளை நமதானதாகவும் எண்ணிக்கொள்வதால் உண்மையில் ஒரு பயனும் இல்லை. அதனால் மேலோங்கும் மயக்கத்தில் தம் சொந்த மண்ணின் பழம்பெருமைகளை அறிஞர்களை நாம் அறியவும் கொண்டாடவும் மறப்போம். நம் மண்ணில் தோன்றிய நம் பாட்டன்கள் செந்நாப்புலவர் கார்மேகக்கோனார் மற்றும் புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை, பேராசிரியர் தொ.பரமசிவம் ஆகியோர்களைப் பற்றி நம் இளைஞர்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? கிருஷ்ணர் கதையை விட ஒரு பழம் சமூகத்தின் விடுதலைக்கு இது மிக அவசியமன்றோ? எப்படி சிங்கள அரேபிய இடையர்களும் தமிழ் இடையர்களும் ஒன்றல்லவோ அப்படித்தான் பிற மொழிக்காரர்களும். அதற்காக அவர்களுடன் பிரிவினையோ பகையோ பாராட்டத் தேவையில்லை. தமிழர்களாகிய நாம் நம் பெருமைகளை அறிந்து போற்றிப் பாதுகாக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதுவே இந்த மண்ணில் நமக்கு நிலையான பலம். விழிப்புணர்ச்சி இல்லாவிடில் 500 வருடங்கள் கழித்து நம் பேரப்பிள்ளைகளை வடக்கிருந்து தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்த வந்தேறிகளாக யாரேனும் கருத நேரலாம். தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரும் அறிவுசார் சமூகமான நாம் நம் மண் சார்ந்த தமிழ் அடையாளங்களை தவிர்ப்பது ஆபத்தானது. நம் முல்லை நில இடையர் குடி மக்களின் பெருமைகளை நம் தமிழ் மக்களிடம் எடுத்துச் சொல்வோம்...

இருந்தால் கூறுங்கள்...

"எதையும் கேள்வி கேட்காமல் / ஆராயாமல் ஏற்றுக்கொள்ளாதபடி சகலவிதமான அறிவுத் தேடல்களையும் தன் மக்களிடம் தூண்டுபவன் எவனோ அவனே ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமான தலைவன்."

நம் சமூகத்தில் இப்போது இப்படி யாராவது உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருந்தால் கூறுங்கள் அவரது சிந்தனைகளையும் கருத்துக்களையும் பரப்புவோம்.

விவேகானந்தர் சொல்கிறார்...!

விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் பேசிய பின் சென்னை வந்த போது அவர் ஆற்றிய உரையில் சிலவற்றை உங்களுக்குத் தருகிறேன்.

“இளைஞர்களே! இதை நினைவில் கொள்ளுமாறு தனிப்பட்ட முறையில் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்திய ஆன்மீக சிந்தனைகளால் உலகத்தை நாம் வெல்ல வேண்டும். ஆன்மீகச் சிந்தனைகள் என்று நான் கூறியது – உயிருணர்வு அளிக்கக்கூடிய கோட்பாடுகளையே தவிர, நாம் நெஞ்சோடு நெஞ்சாக இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிற மூட நம்பிக்கைகளை அல்ல. கண்ட கண்ட மூட நம்பிக்கைகளை எல்லாம் மதம் என்ற பெயரில் அனுமதித்து தன்னைத்தானே பாழ்படுத்திக் கொண்டிருக்கிற மூளைகளிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த மூட நம்பிக்கைகளின் பின்னால் ஓடாதீர்கள். அதைவிட நீங்கள் உறுதியான நாத்திகர்கள் ஆகி விடுங்கள். இது உங்களுக்கும் நல்லது. உங்கள் இனத்துக்கும் நல்லது.

ஐன்ஸ்டீன் பார்வையில் கடவுள்...

ஐன்ஸ்டீன் கூற்றுக்களில் சில:

* நான் கடவுள் நம்பிக்கையற்ற, ஆனால் ஓர் ஆழமான ஆன்மீகவாதி. இது ஒரு புதுவகையான மதம்தான். (I am a deeply religious nonbeliever. This is somewhat new kind of religion.)

* கடவுள் என்னும் கோட்பாடு எனக்கு ஏற்புடைத்ததல்ல; அது அறிவுக்குப் புறம்பானது.

* இயற்கைக்கு ஏதோ ஒரு குறிக்கோளோ அர்த்தமோ இருப்பதாக நான் நினைக்கவில்லை. இயற்கையின், இந்தப் பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தையும், அதில் இன்னும் நம் அறிவுக்கு எட்டாதிருக்கும் அறிவியல் உண்மைகளையும் நினைத்து, அறிவுள்ள எவனும் தன்னை மிகவும் அற்பமான ஒன்றாக உணரவேண்டும்.இதுவே உண்மையான சமயச் சார்பான சிந்தனையாகும். இந்த சமய உணர்வுக்கும் மதங்கள் பேசும் இறைத்தன்மைக்கும் ஏதும் தொடர்பில்லை.

ஐன்ஸ்டீனின் மத மறுப்பு அறிக்கைகளுக்குப் பிறகு அவரைக் கண்டித்து பலரும் எழுதியும் பேசியும் வந்தனர். எல்லா பெரிய மனிதர்களையும் போலவே ஐன்ஸ்டீனும் கடைசிக் காலத்தில் கிறித்துவரானார் என்ற புரட்டுச் செய்திகளும் அவர் காலத்திற்குப் பிறகு பரப்பப்பட்டன!

நண்பர்களே உங்களுக்குத் தெரியுமா?

மனித ரத்தம் பற்றிய ஆய்வை நடத்திய ‘குற்றத்திற்காக’ செர்வெட்டஸ் எனும் விஞ்ஞானி கழுமரத்தில் ஏற்றி உயிருடன் கொளுத்தப்பட்டார்.

‘வானுலகக் கோள்களின் சுழற்சிபற்றிய’ தனது கண்டுபிடிப்பை 36 ஆண்டுகளுக்கு முன்பே நூலாக எழுதியும், திருச்சபையின் கொலை வெறிக்குப் பயந்துபோன கோப்பர்நிகஸ் இறுதியில் தனது மரணப்படுக்கையில்தான் வெளியிட்டார்.

வலிதெரியாமல் இருப்பதற்காக பயன்படும் குளோராஃபார்ம் எனும் மயக்க மருந்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் யங் சிம்ஸன் கண்டுபிடித்தார் ..ஆனால் ‘கஷ்டத்தில் நீ குழந்தை பெறுவாய்’ எனும் பைபிளின் வாக்கியத்தைக் கொண்டு தாய்மார்கள் பிரசவத்தின் போது மயக்க மருந்து பயன்படுத்தக் கூடாது அப்போதுதான் தாய்ப்பாசம் இருக்க முடியும் தடை போட்டார்கள்.

பூமியின் இயக்கத்தையும், சூரியனைச் சுற்றி வருவதையும் கண்டு சொன்ன கலிலீயோ திருச்சபையினால் சித்ரவதை செய்யப்பட்டார். அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

(இதெல்லாம் மதத்தை எதிர்த்ததினால் அவர்களுக்கு கிடைத்த தண்டனைகள்)

ஊடகமெல்லாம் வலுத்தவன் கையில்

எய்ட்ஸ் முதல் எபல்லோ வரை .....
எல்லாமே ஆப்பிக்காவிலிருந்தே கிளம்பி வருகிறதே ஏன்?

அடுத்த உலகப்போருக்குத் தேவையான உயிரியல் கிருமிகளை உருவாக்கிய நாடுகள் அதை சோதனை செய்வதற்காக இடத்தை தேடிய போது 
படிக்காத....
ஏழ்மையான,,,,,,,,
படிக்காத பாமர மக்களை அதிகம் கொண்ட,,,,,,,,
என்ன பாடு படுத்தினாலும் ஏனென்று கேள்வி கேட்காத,,,,,,,,
அமெரிக்க அணுக்கழிவுகளால் விளைச்சலற்று பஞ்சத்திலே அடிபட்டு பட்டினி கிடக்கும் மக்களை கொண்ட,,,,,,,,
ஒரு கிராமத்தையே அழித்தாலும் ஏனென்று கேட்க நாதியில்லாத,,,,,, அடிக்கடி உள்நாட்டுப்போர் நடைபெற "வைக்கப்பட்ட",,,,,,,
ஆபிரிக்க நாட்டை கண்டால் விடுவார்களா என்ன ?.

தடுப்பூசி என்று கிருமியை பரப்பினால் அந்தமக்களுக்கு தெரியவா போகிறது ? "உலகம் கேள்வி கேட்டால் குரங்கோடு உடலுறவு கொண்டார்கள், சிங்கத்தோடு உறவு கொண்டார்கள் அதனால்தான் அந்தகிருமி உருவானது" என்று பரப்பி விடலாமே. 

ஊடகமெல்லாம் வலுத்தவன் கையில்தானே இருக்கிறது.

ஒரு சாதியின் யதார்த்த நிலைமை

தலைவனுக்கான எந்தத் தகுதியுமில்லாமல், கவர்ச்சிகரமான நாலு வரி வீர வசனமும் பகவான் கிருஷ்ணன் படமும் இருந்தால் மட்டும் போதும் நம் மக்களை சுலபமாய் ஏமாற்றிவிடலாமோ?

சிவவாக்கிய சித்தன்

"கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே."


- சிவவாக்கிய சித்தன்

தாய்மொழி அடையாளத்தை விட்டுக்கொடுக்காதீர்...

நண்பர்களே...

நீங்கள் எந்தக் கருத்தையோ கொள்கைகளையோ உடையவராய் இருங்கள். ஆனால் ஒருபோதும் உங்கள் தாய்மொழி அடையாளத்தை விட்டுக்கொடுக்காதீர்.

தன் தாய்மொழியின் மீது பற்றில்லாத எந்தவொரு சமூகமும் காலப்போக்கில் தன் அடையாளத்தையும் போராட்ட குணத்தையும் வரலாற்றையும் தொலைத்து நிற்கும்.

தமிழ் யாதவர்கள் கூட்டமைப்பு..?

இது தனி அமைப்புமல்ல, கட்சியுமல்ல. தமிழ் யாதவர்களுக்கிடையே பல செய்திகளையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்வது மட்டுமே இதன் நோக்கம். யார் எந்த அமைப்பாக / கட்சியாக இருந்தாலும் உங்கள் கருத்துக்களை இங்கே தாராளமாகப் பகிர்ந்துகொள்ளலாம்.

தமிழ் மொழியின் சிறப்பு, புராணப் புரட்டுகள் கலப்படமற்ற தமிழ் இடையர்களின் தொன்மையான வரலாறு, இளைஞர்களுக்கான சமூக அரசியல் உணர்வு தொடர்பான கருத்துக்களை பரப்புவதே எமது நோக்கம். விருப்பமுள்ளவர்கள் எங்களின் பழைய பதிவுகளுக்கு கருத்து எழுதுங்கள். வீரியமான சிந்தனையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஒருங்கிணைப்பதே முதன்மையான குறிக்கோள்.

யார் எந்தக் கட்சியில் இருந்துகொண்டு நமக்கு நன்மை செய்தாலும் ஆதரிப்போம்...!

வரமா? சாபமா?

தன் இனம் தற்காலத்தில் என்ன நிலைமையில் இருக்கிறது என்று அறிந்து அதைக் களைய முயலாமல் சதா நேரம் கடவுளுக்கு கோயில் கட்டுவதிலும் திருவிழாக்கள் நடத்துவதிலுமே தங்களின் சகலவிதமான ஆற்றலையும் செலவழிக்கும் இளைஞர்களைக் கொண்ட உலகின் ஒரு மிகப்பெரிய சாதிக்குழு நாமே. இது வரமா? சாபமா?

சொந்த பலமில்லையா? திறமையில்லையா?

வடக்கத்தியவர்களிடம் தனக்கு வேண்டிய உதவி பெறவே இன்றைக்கு பல யாதவர் அமைப்புக்கள் தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப்படுகிறது. இவர்களில் பலரும் தமிழர்களுமல்ல, சுத்த யாதவர்களுமல்ல. அதனாலே நம் தமிழ்ச் சமூகத்தின் வரலாறு இவர்களுக்குத் தேவையற்றதாகிறது. பிற மொழிக்காரர்களை சாராமல், ஒன்றுகூடி வேண்டிய உரிமை அடைய தமிழர்களுக்கு சொந்த பலமில்லையா? திறமையில்லையா?

இது சரியா? தவறா?

ஹிந்தி மற்றும் கன்னட. தெலுகு யாதவர்களுடன் தமிழ் யாதவர்கள் இணைவதால் பயன் என்ன? ஒவ்வொருவர்களின் வரலாறுகளும் வெவ்வேறன்றோ? இதனால் அடுத்த தலைமுறை தெளிவற்ற வரலாற்றுடன் அல்லவா வளரும்? தாய்மொழி உணர்வு இல்லாத சமூகம் கடைத்தேறுமா? யார் எம்மொழியோ அதே மொழி அடையாளம் காட்டிக்கொள்ள அவர்கள் ஏன் தயங்கவேண்டும்? வீரசிவாஜி, அசோகர் என நாம் பெருமைப்பட்டுக்கொள்வதைப்போல நம் தமிழ் இடையர் சமூக சித்தர்கள் திருமூலர், இடைக்காட்டுச் சித்தர் / சித்தர்கள் பாடல்கள் / முல்லைத்திணை பற்றி அவர்கள் கேள்விப்பட்டாவது இருப்பார்களா? மொழி உணர்வையும் வரலாற்று உணர்வையும் ஊட்டாமல் போராட்ட குணத்தை வளர்க்க இயலுமா? நம் மொழி அல்லாதவர்களை கொண்டாடும் நம்மைப்போல இந்திக்காரர்களின் முகநூலிலோ அடிக்கடி பயன்படுத்தும் இடங்களிலோ அழகுமுத்துக்கோனை சிலாகிப்பதை எடுத்துக்காட்டுங்கள்? இயல்பாகவே ஹிந்திக்காரனுக்கு அடிபணியும் தன்மையை நாம் ஏற்படுத்துவது அறியாமை. அடுத்தவர்களின் பெருமைகளைக் கொண்டாட ஹிந்திக்காரர்கள் நம்மைப்போல் இளிச்சவாயர்களல்ல. பொதுவாகவே தெற்குப் பகுதி ஆட்களை தலைவர்களாக யாரை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்? வடக்கத்தியர்களின் வரலாற்றுப் பெருமைகளை ஏட்டறிவோடு சொல்லி தன் சமூக மக்களை இப்படி வழிநடத்துவதால்தான் இன்றைக்கு சொந்த வரலாற்றை அறியாமல் நிற்கிறான் தமிழன்.

இது பிரிவினை கருத்தல்ல. நம் வரலாற்றின் மீதான அக்கறை. எல்லோருடனும் நட்பு பாராட்டுவோம்.

யாதவ்? கோனார்? ஒரு சந்தேகம்...

முல்லை நில மக்களாகிய நாம் மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கலாமா? அல்லது நம் மொழி அடையாளத்திற்கு முன்னுரிமை கொடுக்கலாமா? அதாவது பெயருக்குப் பின்னால் யாதவ் என போடுவது சிறந்ததா? கோனார் என போடுவது சிறந்ததா? யாதவ் என்ற பழக்கம் எப்போதிலிருந்து வந்தது? பழங்காலத்தில் நம் முன்னோர்கள் யாதவ் என இட்டுக்கொண்டார்களா?

சுய தெளிவுக்காகவே இதை கேட்கிறோம். கற்றறிந்தவர்கள் கருத்து தெரிவிக்கவும்.

முடியாது / ஆகாது / நடக்காது

இளைஞர்களே...

"முடியாது / ஆகாது / நடக்காது" என்று எண்ணுவதற்குத்தானா நம் படிப்பும் திறமையும் காலங்காலமாக பயன்பட வேண்டும்?

எளிமையே உண்மையான பக்தி

திருவிழாக்கள் நடத்த தேவையானது ஆடம்பரமும் படோடாபமுமல்ல. உண்மையான பக்தியும் எளிமையும்தான். பெரும் ஆடம்பர செலவு செய்துதான் ஒரு பாரம்பரியத்தை காப்பாற்ற முடியுமென்றால் பொருளாதாரமற்றவர்கள் என்ன செய்வார்கள்?

தெய்வ உணர்வுதான் நம் உண்மையான நோக்கமென்றால், ஏழை பணக்காரன் அடையாளம் தெரியாதபடி திருவிழாக்கள் எளிமையாக நடத்தப்பட வேண்டும். ஆனால் பக்தி உணர்வற்று கௌரவத்திற்காக நடத்தப்படுவதாலே அதிக பணம் செலவழிக்கப்படுகிறது என்பதுதானே நடைமுறை உண்மை..!

அதெல்லாம் யார் விட்ட சாபம்?

மகாபாரதத்தில் காந்தாரி விட்ட சாபம்தான் இன்றும் யாதவர்களின் ஒற்றுமையை இல்லாமல் செய்கிறதாமே. 

ஒரே தலைமையுள்ள சாதியோ மதமோ மொழியோ இனமோ இந்த உலகில் எந்த மூலையிலும் கிடையாது. அதெல்லாம் யார் விட்ட சாபம்?

முன்னேறிவிட்டோம் என்பது பொய்

பிறர் வியக்கும்படியும் பாராட்டும்படியும் வீரியமான எழுத்துத்திறனும் பேச்சுத்திறனும் போராடும் திறனும்கொண்ட ஒரு 100 இளைஞர்களாவது நம் யாதவ சமூகத்திலிருந்து உருவாகாதவரையில் நாம் முன்னேறிவிட்டோம் என்பது பொய்.

யாரார்?

உங்களுக்குத் தெரிந்த; நம் சமூகத்திலிருந்து உருவான வீரியமான எழுத்தாளர்கள். பேச்சாளர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், வரலாற்று அறிஞர்கள் யாரார்? கருத்து தெரிவியுங்கள்.

அடையாளம் காட்டுங்கள்...

1930ல் பிறந்து 1959ல் மறைந்து 29 வயதுவரை மட்டுமே வாழ்ந்த மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சிந்தனை வரிகள் காலம் கடந்தும் எவ்வளவு வீரியமானவைகளாக நிற்கின்றன..!

உங்களுக்குத் தெரிந்த; நம் சமூகத்திலிருந்து உருவான வீரியமான எழுத்தாளர்கள். பேச்சாளர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள் யாரார்? தெரிந்தால் சொல்லுங்கள் அவர்களைப் படிப்போம். பிறருக்கு தெரியப்படுத்துவோம். இல்லையெனில் இப்படியானவர்களை ஊக்குவிப்போம். அடையாளம் காட்டுங்கள்...

எது அரசியல்?

அவரவர் பகுதிகளின் பொதுப்பிரச்னைகளை எதிர்கொள்ள பிறரை எதிர்பார்த்து காத்திராமல் சுயமாக அந்தந்த பகுதி மக்களின் சக்தியிலேயே அதை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்துவதுதான். பிரச்னைகளைக் கண்டு ஒதுங்கும் மனோபாவத்தின் உளவியல் காரணத்தை அப்புறப்படுத்த முனைவதுதான் அரசியல் என்கிறோம். இது கற்பனாவாதமல்ல. தொடர்ந்து கருத்து தெரிவியுங்கள். நன்றி...

ஆனால் இன்னும்கூட

சந்திரனில் கால்வைத்து என்றோ நடந்துவிட்டான் மனிதன். ஆனால் இன்னும்கூட பரமசிவனின் தலையில்தான் சந்திரன் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் இளைஞர்களும் இந்தியாவில் உருவாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அப்படியெனில் மன தைரியம் பிறக்க?

"மன தைரியம் ஏற்படாதவரையில் ஒருவனின் எல்லாவிதமான அறிவும் திறமையும் பொருளும் பெருமையும் பயனற்றதாகிவிடுகிறது." 

அப்படியெனில் மன தைரியம் பிறக்க?

கிருஷ்ண ஜெயந்தியும் நம் பொருளாதாரமும்...

தற்போது சராசரியாக கிராமங்களிலேகூட ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு செலவு செய்கிறார்கள். சில கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் 2 அ 3 லட்சங்கள். சென்னை மாதிரியான பெரிய நகரங்களிலோ பகுதிவாரியாக ஆங்காங்கே லட்சக்கணக்கில் திருவிழாக்கள். இப்படிப் பார்த்தால் ஒரு மாவட்டத்திலேயே குறைந்தபட்சம் 50 லட்சம் ரூபாய் ஆகிறது. மாநிலம் முழுதும் சராசரியாக குறைந்தபட்சமாக 10 கோடி என்று கணக்கிடுவோம். நாட்டில் வேறெந்த சமுதாயமாவது இவ்வளவு தொகையை எதற்கேனும் செலவிடுகிறார்களா? தொடர்ச்சியாக 5 ஆண்டு திருவிழாக்களுக்கு செலவிடும் தொகையில் ஆங்காங்கே தொழிற்சாலைகளையோ நமக்கென இலவச கல்வி நிலையங்களையோ உருவாக்கலாம்தானே. மன்னிக்கவும், இது குறை சொல்வதல்ல. அடுத்த ஆண்டு எல்லோரும் எளிமையாய் கொண்டாட முயற்சித்து இயன்றளவு நம் சமூக ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க உதவி செய்வோம்.

அறிவியல் பார்வையும் அதிகார அரசியல் வேட்கையுமே தேவை

மெத்தப்படித்த நம் சமூகத்து பல இளைஞர்களுக்கு சட்ட அறிவும் அடக்குமுறைக்கு எதிரான அரசியலும் தெரியாமல் எதிர்க்கவும் துணிவில்லாமல் பல கிராமங்களில் பிற சமூகங்களுக்கு பயந்து வாழ்ந்துகொண்டிருப்பதை கண்கூடாக அறிகிறோம். மனோ தைரியமும் சுய தெளிவும் இல்லாதவரையில் எல்லா அறிவும் பயனற்றதாகிறது. அறிவியல் பார்வையும் அதிகார அரசியல் வேட்கையுமே தேவையென கருதுகிறோம்.

புதிய பார்வையுடன் கூடலாம் வாருங்கள்...

பிற சாதி இளைஞர்கள் வணங்கும்போது தவிர பிற சமயத்தில் கடவுளை தூக்கி சுமப்பதில்லை. ஆனால் நம் இளைஞர்கள் எல்லோரும் எப்போதும் கடவுளோடுதான் இருக்கிறார்கள். இதை ஞானமாய் உணரும் அரைகுறை மயக்கத்தினாலே அரசியலை நோக்கி யாரும் நகர்வதில்லை. அதிகார வேட்கையை வளர்த்துக்கொள்வதுமில்லை. அதுமட்டுமின்றி தன்னை பிறர் அடக்குவதையும் கண்டுகொள்ளாமல் கடவுள் எண்ணத்துடன் பிரார்த்தித்து சரணடைகிறான். வழக்கமான அதே உளவியல் தவறை நாம் செய்யவேண்டாம். புதிய பார்வையுடன் கூடலாம் வாருங்கள்...

இதன் அர்த்தம் என்ன?

5 லட்சம் யாதவர்களை முன்னம் சென்னை கடற்கரையில் கூட்டி உணர்ச்சிப்படுத்தியபோதும் மீண்டும் அதே நம் மக்களை ஏன் ஒவ்வொருமுறையும் உணர்ச்சிப்படுத்த வேண்டியதாகிறது? இதன் அர்த்தம் என்ன? இவ்வளவு மக்களைக் கூட்டியும் பயனற்றுப்போவது ஏன்? மக்களை கூட்டுபவனே தலைவன் எனக்கொண்டால் பெருந்தலைவர்களும் அடுத்த தேர்தலில் தோற்பது ஏன்?

"மக்களை கூட்டுவதோடு மட்டுமல்லாமல் தன் சீரிய கருத்துக்களாலும் சிந்தனையாலும் மக்களை ஆட்படுத்துபவன்தானே தலைவன்."

யாரால் மாற்றம் வரும்?

அர்த்தமற்ற கருத்துக்களை உணர்ச்சியாகப் பேசிவதாலேயே அது சிந்தனையாகிவிடாது. உணர்ச்சியில் அறியாமைகளும் இருக்கும். உணர்ச்சி அடங்கிவிடும். சிந்தனை அடங்காது. கூட்டம் கூடினாலே மனிதன் உணர்ச்சிவயப்படும் விலங்காகிவிடுகிறான். இதனாலேயே எளிதில் பலரும் தலைவர்களாகிவிடுகிறார்கள். சிந்தனை என்பது தேடல். இதை ஏற்படுத்த மக்களின் மீதான பொய்யற்ற ஆழ்ந்த அக்கறை தேவை. இப்படியான தலைவனாலேயே மாற்றம் ஏற்படும். அரசியல் ஆதாயவாதிகளைத்தவிர இப்படியான தலைவர்களை நாம் இன்னும் சந்திக்கவில்லை.

தலைமை / தலைவன்?

சிந்தனை என்பது வேறு. உணர்ச்சியுடன் பேசுவது என்பது வேறு. உணர்ச்சியுடன் பேசுபவர்களெல்லாம் தலைவர்களுமல்ல, சிந்தனையாளர்களுமல்ல. சிந்தனை என்பது பற்றிக்கொண்டால் அடங்காதது.

யார்?

நாம் தீவிரமாக சிந்திக்கும்படி நம் சிந்தனையை தூண்டிய நம் சாதி தலைவன் யார்?

உங்களில் எத்தனைப்பேர்?

நம் சமூகத்தின் பிரச்னைதான் என்ன? நாம் ஏன் ஒன்று சேராமல் சிதறிக்கிடக்கிறோம்? அரசியல், பதவி வேட்கையை நாம் ஏன் தவிர்க்கிறோம்? நம் சமூகம் தற்காலத்தில் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன? நம்மை ஒன்றுசேரவிடாமல் தடுப்பது எது? வெளியுலக வழிகாட்டலும் தொடர்பும் இல்லாத நம் மக்களின் நாளைய கதி? தமிழக பால்வளத்துறையிலும் நம் சாதிக்காரர்களுக்கு பொறுப்பில்லை?

மாநிலம் தழுவிய அளவில் யாதவ இளைஞர்களுக்கான கருத்தரங்கு நடத்த தீர்மானித்திருக்கிறோம். நாங்கள் எந்தவொரு அமைப்பையும் அரசியல் கட்சியையும் சார்ந்தவர்களல்ல. அதேபோல் நீங்கள் எந்த அமைப்பும் கட்சியாக இருந்தாலும் வரவேற்கிறோம். இது படித்த இளைஞர்களின் சிந்தனைக் கூட்டம் மட்டுமே.

உங்களில் எத்தனைப்பேர் உங்களின் அறிவையும் சிந்தனையையும் நம் சமூகத்திற்காக தந்துதவ தயாராக இருக்கிறீர்கள்?

குறைந்தபட்ச தொகை சுமார் 5 கோடி ரூபாய்...!

இந்த ஆண்டு "கிருஷ்ண ஜெயந்தி" திருவிழாவிற்காக மட்டும் தமிழ்நாடு முழுதும் நம் சமூகம் செலவழித்த குறைந்தபட்ச தொகை சுமார் 5 கோடி ரூபாய். இதற்கு மேலும் இருக்கலாம். வருடாவருடம் கிருஷ்ணரைப் பற்றி சிந்தித்து இவ்வளவு செலவு செய்யும் நாம், தமிழகத்தின் பல கிராமங்களில் நம் சாதியினருக்கு எதிரான அடக்குமுறைகளைப் பற்றி கண்டுகொள்ளாமல் போவது ஏன்?

உங்கள் அரசியல் திறமை?

புதிய சிந்தனைகளோடும் புரட்சிகர செயல்திட்டத்துடனும் நம் அடுத்த தலைமுறையை வழிநடத்தப்போகும் தலைவன் யார்? தலைவர்களை எதிர்பார்த்து காத்திருப்பது நம் அறிவுக்கும் சிந்தனைக்கும் அழகா?

உங்கள் அரசியல் திறமையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். எங்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு கலந்துகொள்ளுங்கள்.

நம் சமூகத்தின் இப்போதைய நிலை என்ன?

நிகழ்கால உலக அறிவையும், தன் நிகழ்கால பிரச்னைகளையும் கண்டுகொள்ளாமல் எந்த சமூகம் தன் பழைய பெருமைகளிலேயே மயங்கிக்கிடக்கிறதோ அச்சமூகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.

நம் சமூகத்தின் இப்போதைய நிலை என்ன?

நாம் நம் சங்கங்களை குறைசொல்வது முறையா?

நமக்காக போராட முன் வருபவர்களை நாம் ஏன் குறைசொல்ல வேண்டும்? நம் பிரச்னைகளை அவர்கள் வந்துதான் தீர்க்க வேண்டுமென நாம் ஏன் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும்? தங்கள் பகுதி பிரச்னைகளுக்கே நாம் அடுத்தவர்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்தால் அடுத்த பகுதி பிரச்னைகளை தீர்க்குமளவுக்கு நாம் வலுப்பெறப்போவது எப்போது? பிரச்னைகளை எதிர்கொள்ளத் தயாராகாத நாம் நம் சங்கங்களை குறை சொல்வது நியாயமா? ஆக்கப்பூர்வமான பணிகளுக்கல்லவா நாம் இணையவேண்டியது..!

வளர்ச்சியென்பது செல்வம் தேடி சேர்ப்பதில் மட்டும்தானா?

தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து பல பெண் எழுத்தாளர்களும் இலக்கியவாதிகளும் உருவானதைப்போல நம் சமூகத்திலிருந்து பெண் எழுத்தாளர்களும் இலக்கியவாதிகளும் யாரேனும் உருவாகியிருக்கிறார்களா?

ஒரு சமூகத்தின் வளர்ச்சியென்பது செல்வம் தேடி சேர்ப்பதில் மட்டும்தானா?

நாங்கள் ஏன் "இடையர்கள்" என அடிக்கடி குறிப்பிடுகிறோம்?

இடையர்கள் எனும்போது ஒரு மூத்த தமிழ்க்குடியின் பழந்தொன்மையையும் சேர்த்தே போற்றுகிறோம். எந்த சொல்லால் கிராமங்களில் நம்மை ஏளனமாய் குறிக்கிறார்களோ அதே சொல்லை அறிவாற்றல் மிக்க வலிமையான இளைஞர்களின் குறீயீட்டுச் சொல்லாக மாற்றிக்கொள்ளவே.

இடையர் சமூக இளைஞர்களே..!

படிந்துகிடக்கும் ஒட்டடைகளை அப்புறப்படுத்த முயலாமல் விலையுயர்ந்த வாசனை திரவியங்களை தெளிப்பதால் மட்டும் உண்டாகும் பயன் என்ன?

பலநூறு சங்கங்கள், அமைப்புகள் இருந்தும் மாற்றங்கள் வராமல் போவது ஏன்?

நாம் ஏன் போராட வேண்டும்?

நாம் ஏன் போராடவேண்டும் என்பதற்கான முழு காரணங்களே இப்போதைக்கு நம் மக்களை சென்று சேரவேண்டும். அந்த காரணங்களில் இருக்கும் நியாயங்களே அவர்களை ஒன்று சேர்க்கும். போராடவேண்டும் என்ற எண்ணத்தை தூண்டாமல் அவர்களை போராட்டத்திற்கு அழைப்பதால் பயனில்லை.

மாற்றம் தானாய் நம் பின்னே வரும்...

நம் இளைஞர்களை சிந்திக்கவிடாமல் செய்யும் கற்பனைக் கதைகளிலிருந்து முதலில் விடுபடவேண்டும். நம் சமுதாயம் முற்போக்கு சக்தியாக மாறவேண்டும். பிற இனங்களுக்கும் தலைமை தாங்கும் அரசியலறிவு பெறவேண்டும். பழைய கற்பிதங்களை ஒதுக்கி தெளிவு பெற்றால் கூடவே தைரியம் பிறக்கும். மாற்றம் தானாய் நம் பின்னே வரும்...

தலைவன்?

"மந்தைகளைப்போல மக்களை ஒன்று சேர்ப்பவனைவிடவும், அம்மக்களை சிந்திக்கும்படி செய்கிறவன் எவனோ அவனே தலைவன்"

இடையர் இன சகோதரர்களே சிந்திப்பீர்...!

இடையர் இன சகோதரர்களே சிந்திப்பீர்...!

"சக்திமான்"கள் வந்து எந்த குழந்தையையாவது காப்பாற்ற முடியுமா? முடியவே முடியாது. சுவாரசியத்திற்காக கதைகளில் மட்டுமே சக்தி படைத்ததாய் படைக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தின் உண்மையை அறிந்துகொள்ள சிறிதும் முயலாமல் அந்த சக்திமானுக்கு அபாரமான சக்தியிருப்பதாக வாழ்நாள் முழுதும் ஏதேனும் ஒரு குழந்தை நம்பிக்கொண்டிருந்தால் அக்குழந்தையை நாம் எப்படி பார்ப்போம்? குழந்தைப் பருவம் கடந்தும் அப்படி நம்பிக்கொண்டிருந்தால் அதனால் அந்தக் குழந்தைக்கு ஏதேனும் பயனுண்டா? இது அறிவுக்கு தகுதியா?

பிற சாதிக்காரர்களின் அடக்குமுறைகள், காவல்துறை மிரட்டல்கள், சிறை, வழக்கு, காவல்நிலைய முறைப்பாடு, சட்டமுறைகள் என சம காலத்து வாழ்க்கைக்குத் தேவையான எந்த அறிவையும் வளர்த்துக் கொள்ளாமல், சாதாரண பிரச்னைகளுக்குக்கூட ஒன்றுகூடி நம்மை நாமே வழிநடத்திக்கொள்ளவோ நம்மீதான அடக்குமுறைகளை நேரடியாய் எதிர்கொள்ளவோ போதிய பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளாமல் கடவுளின் புகழை மேன்மேலும் பரப்பி கோயில்கட்டி வருடந்தோறும் திருவிழாக்களுக்காகவே நம் பெருமாபாலான இளைஞர்கள் தங்கள் வாழ்வை செலவிடுகிறார்கள். இதன் விளைவே எதற்கெடுத்தாலும் தலைவிதி என பிரச்னைகளிலிருந்து ஒதுங்கிக்கொள்வது. யாரையும் எதையும் நம்பிக்கொண்டிராமல் நம் பிரச்னைகளுக்கு நாம்தான் போராட வேண்டும் என்ற அடிப்படை அறிவுநிலை நமக்குள் எழுந்தாலொழிய யாரும் நம்மை பொருட்படுத்தப்போவதில்லை. இனி கடவுள்களுக்காக காலத்தையும் பொருளையும் அதிகம் செலவிடாமல் அரசியல், அதிகாரம், அறிவியல் மற்றும் பொருளாதார சிந்தனை பற்றிய பாதைகளில் அடுத்த தலைமுறையை திருப்பிவிட முயற்சியெடுப்போம். பொய்யான பெருமைகளை பரப்பி பரப்பி இளைஞர்களின் ஆற்றலை கற்பனைகளில் நீர்த்துபோகச் செய்யாமல் எதார்த்த வாழ்க்கையை ஒன்றுபட்டு எதிர்கொள்ளூவோம். இதற்கு தலைவர்கள் தேவையில்லை. நாமே நம் கிராமங்களில் எல்லோருக்கும் தலைவனாக மாற ஆரம்பிப்போம்.

"அறிவின் தேடலே மாற்றத்திற்கான முதற்புள்ளி "

ஒவ்வொரு தலைமுறையிலும் முதலிலிருந்தே...

மக்களின் சிந்தனை மாறாதவரையில் எந்த மாற்றமும் நிலையானதல்ல. அதிகாரத்தைப் பிடிப்பது  மட்டும் அரசியலல்ல. நம் மக்கள் தமது பழைய ஒட்டடை படிந்த சிந்தனைகளை உதறிவிட்டு புதிய சிந்தனைகளுக்கு மாற வேண்டும் / அதை நாம் மாற்ற வேண்டும். இல்லாவிடில் ஒவ்வொரு தலைமுறையிலும் முதலிலிருந்தே இதற்கான போராட்டத்தை துவங்க வேண்டியதாயிருக்கும்.

மக்களின் மாற்றம் என்பது என்ன?

மாற்றத்தை நோக்கி நம் மக்களை சிந்திக்கச் செய்யாமல் அறிவுக்கு ஒவ்வாத பயனற்ற பழம் பெருமைகளையெல்லாம் கூறி கட்டிக்காத்து நம்மை பழமையான மயக்கத்திலே இருக்கச் செய்யும் தலைவர்களே நம் சாதியில் ஏற்படுவது ஏன்? அடிப்படை அரசியல் தெளிவற்ற முதுகெலும்பற்ற சீரிய சிந்தனையற்ற செயல்திறனற்றவர்களெல்லாம் இந்த சாதியின் கதாநாயகர்களாக தங்களை காட்டிக்கொள்ள முனைவது கட்டுக்கதை பெருமைகளில் மேன்மேலும் நாம் மயங்கிக் கிடப்பதால்தானே...?

எப்போது மாறும்?

நண்பர்களே...

உங்கள் பிரச்னைகளை நீங்களே எதிர்கொள்ள தயாராகாதவரையில் யாரும் யார் பிரச்னையையும் தீர்க்க முடியாது. அப்படி உங்களிடம் சொல்கிறவர்கள் உங்களை ஒருவித மயக்கத்திற்கு உள்ளாக்குகிறார்கள்.

நாம் ஏன் யாரோ ஒரு தலைவனை எதிர்பார்த்து மயங்கிக்கிடக்க வேண்டும்? நம்மிடம் என்ன இல்லை? நாம் ஏன் நம் சாதிக்கு இன்னமும் ஒரு கதாநாயகனை தேடிக்கொண்டிருக்கிறோம்? பாட்டன் காலத்து அறிவிலிருந்து நாம் சற்றேனும் முன்னேறி இருக்கிறோமா? யாரோ சிலர் எப்போதோ சொன்னதையெல்லாம் சற்றும் ஆராய்ந்து பாராமல் எதற்காக எப்போதும் நாம் தூக்கிச் சுமக்கவேண்டும்? பிரச்னைகளை மறந்து பெருமைகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பதால் எது மாறப்போகிறது? எப்போது மாறும்?

பெருமைகளை மட்டுமே பேசி பரப்பி வாழ்வதில் யாருக்கு பயன்?

நம் அறிவும் ஆற்றலும் பொருளும் திறமையும் வழிகாட்டலும் நமக்கு அடுத்தபடியான வலுவற்ற நம் சமூக மக்களுக்கு சிறிதளவேனும் பயன்படவேண்டும். பெருமைகளை மட்டுமே பேசி பரப்பி வாழ்வதில் யாருக்கு பயன்?

நம் சாதிப் பெருமைகளில் பலவும் கற்பனை கலந்தது. நம் பாட்டன் முப்பாட்டன் வாழ்ந்த அறிவோடே அதை இன்னமும் நாம் நம்பிக்கொண்டிருந்தால் வருங்காலத்தில் நம்மில் ஒரு அறிவார்ந்த இளைஞர் சமுகம் உருவாக வாய்ப்பின்றி போய்விடும். இவ்வளவு மேன்மைமிகு பெருமைகளும் நம் சாதிக்கு உண்மையென்றால் நம்மாட்களுக்கு பிரச்னையென்றால் நாமே ஒதுங்கிப்போவது ஏன்? எப்படி? எதனால்?

நாம் நம் மக்களின் & அடுத்த தலைமுறை இளைஞர்களின் எண்ணங்களை அறிவியல் சிந்தனைப் பார்வையோடு கலக்க பாடுபட்டாலொழிய இன்னும் 1000 ஆண்டுகள் கழித்தும் மாடு மேய்ப்பதே பெரும் புண்ணியம் என வாழ்ந்து முடித்துக்கொண்டிருப்பார்கள்.

தெளிவான முற்போக்கான சிந்தனை மட்டும் போதும்...

வணக்கம் சகோதரர்களே....!

நாம் சமூகம் தற்போது ஒரு பெரும் நெருக்கடியான சூழலில் வாழ்ந்துகொண்டிருப்பதை உங்களில் பலர் அறியாமல் இருக்கலாம். நகரம் சார்ந்து வாழ்க்கையை மேற்கொண்டவர்களுக்கு பிற சாதிய அச்சுறுத்தல்களும் அடக்குமுறைகளும் கிடையாது. ஆனால் ஆண்டாண்டு காலமாக தலைமுறை தலைமுறையாக கிராமங்களில் தம் சொந்த மண்ணில் தம் சொந்த உழைப்பில் வாழ்ந்துவரும் பெரும்பாலான நம் சமூக மக்கள் ஏதோவொரு வகையில் பிற சாதிக்குழுக்களுக்கு பயந்துதான் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நம்மில் பல இளைஞர்கள் சகல அறிவோடும் இருந்தும் அது நம் சொந்த மக்களுக்கு எந்தவகையிலேனும் பயன்படுகிறதா?

கிராமங்களில் போதிய வலுவான பாதுகாப்பின்றி பிறருக்கு அஞ்சி வாழும் பய உணர்வுகொண்ட பெரும்பாலான மக்களை நாம் நம் பெருமைக்காய் மறைத்துக்கொண்டு இன்னும் எத்தனை நாளைக்கு எதற்கும் உதவாத பெருமைகளையே பேசிக்கொண்டிருக்கப்போகிறோம்?

நாம் யாரும் யாரையும் சந்தித்துக்கொள்ளாமல் நிதி வசூல் செய்துகொள்ளாமல் பெருமைகளை பேசிக்கொள்ளாமல் நம் ஆற்றலை நம் சமூக மக்களுக்கும் நம்மை வலுவற்றவர்களாய் நினைத்துக்கொண்டிருக்கும் ஏனைய சாதி மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியப்படுத்த முடியாதா? முடியும். அதற்கான ஒரு முயற்சியே இந்த முகநூல் குழு.

தமிழகமெங்கும் நல்ல எழுத்துத்திறமை பேச்சுத்திறமை வழிகாட்டும் திறமை மற்றும் தெளிவான முற்போக்கு அரசியல் தெளிவுகொண்ட நம் சமூகத்தின் 1000 இளைஞர்களை கண்டெடுத்து தேர்வு செய்து நாம் ஒரு தெளிவான அறிவார்ந்த செயல்திறங்கொண்ட தீவிரமான இளைஞர் சமூகம் என்பதை வெளியுலகுக்கு தெரியப்படுத்துவதே இதன் நோக்கம். ஒரு கோடிப்பேரில் ஒரு 1000 இளைஞர்கள் இல்லாமலா இருக்கிறோம்?

இது எந்தவொரு அரசியல் அமைப்பையும் சார்ந்ததல்ல. விருப்பமுள்ளவர்கள் இணையலாம். இந்தச் செய்தியை பகிரலாம்.... ஒரு இணைய வழிப் புரட்சியை நாம் ஆரம்பிக்கப்போகிறோம். எப்படி?.... 5000 நண்பர்கள் இணைந்த பிறகு இதன் செயற்திட்டம் உங்களிடம் விளக்கப்படும்.

நன்கொடை தேவையில்லை. மாற்றத்தை நோக்கிய உங்கள் தெளிவான முற்போக்கான சிந்தனை மட்டும் போதும்...