Friday 26 September 2014

"இடையர்களும் யாதவர்களும்"

இது நமது சமுதாய போராளி ஒருவரின் கருத்து ! நமது அமைப்பின் சார்பாக எனது விளக்கத்தையும் கீழே கொடுத்துள்ளேன் ! இதை படிக்கும் நண்பர்களும் தங்களின் கருத்தை நாகரிகமாக முன்வைக்கவும் ! 

///எங்கே இருக்கிறோம்? எப்படி இருக்கிறோம்? 

இலங்கையில் சிங்கள இனத்திலும் ஆடு மாடு மேய்க்கும் இடையர்கள் இருக்கலாம். அரேபியாவிலும் ஆடு மாடு ஒட்டகம் மேய்க்கும் இடையர்கள் இருக்கலாம். இப்படித்தான் உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் கால்நடைகளை மேய்க்கும் இடையர்கள் இருக்கிறார்கள். தொழிலால் அவர்களும் நமக்கும் ஒற்றுமை இருக்கலாம். ஆனால் அவர்கள் வேறு, நாம் வேறு. /// 

நமது நண்பர் ஏன் இலங்கைக்கும் அரேபியாவிற்கும் உதாரணங்களை தேடி சென்றார் என தெரியவில்லை. காரணம் நமது கிராமத்திலேயே நமக்கு பக்கத்துக்கு வீட்டிலேயே ஆடு மாடுகளை மேய்க்கும் பல சமூக மக்கள் உள்ளனரே ! தலித் , வன்னியர் , கவுண்டர், தேவர் , என பல சாதி மக்களும் கால்நடை வளர்ப்பு தொழிலை செய்து வருகின்றனர், ஆதாலால் அவர்களை அனைவரையும் யாதவர்கள் என்று ஏன் நாங்கள் கூறவில்லை ? காரணம் யாதவர்கள் என்போர் யார் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம் என்பதை அறிக. கால்நடை மேய்ப்போர் அனைவரும் யாதவர்கள் என்று நாங்கள் எப்போது கூறினோம் ? அவ்வாறு கூறாதவரிடத்தில் சென்று இலங்கையில் ஆடு மாடு அரேபியாவில் ஆடு மாடு மேய்க்கரவனும் நீயம் ஒரே சாதிய என கேட்டபது சரியா ? இந்த கேள்வியில் முற்றிலும் உடன்பாடில்லை எனக்கு ! தவறான கேள்வி ! 

மற்று கருத்து இருப்பின் பதிவிட்டு விவாதிக்கவும் ! நன்றி !

- சந்திரவம்ச யாதவர் கூட்டமைப்பு -

-------------------------------------------------------------------------------------------------------------------


ஒரு சமுதாயப் போராளியின் கருத்துக்களுக்கான பதில்...

01. /// செய்யும் தொழிலை வைத்தோ அல்லது பேசும் மொழியை வைத்தோ யாதவர்கள் என கூறவில்லை. கண்ணபிரான் வம்சாவளியினர் என்ற ஒற்றை அடையாளம் கொண்டே நாங்கள் அனைவரும் யாதவர்கள் என்கிறோம். /// 

செய்யும் தொழிலை வைத்து அவர்களும் நாமும் யாதவர்கள் என கூறவில்லை என்ற பொருள்பட கூறுவதால் அதைத் தவிர்த்துப் பார்ப்போம். கண்ணபிரான் வம்சாவழியினர் என்ற ஒற்றை அடையாளம் வைத்தே கூறுவதென்றால் இது புராண நம்பிக்கை வழியானதன்றி வேறில்லை. அக்காலத்தில் தமிழர்கள் வணங்கிக்கொண்டிருந்த பல வழிபாட்டு முறைகளை தனதாக்கிக்கொண்டு பல கடவுள்களையும் தங்கள் அடையாளத்திற்கு ஏற்றமாதிரி திரித்துக்கொண்டு பெரும்பாலானோரை கடவுளைக் காட்டி அடிமைப்படுத்திய கூட்டம் செய்த சூழ்ச்சியின் நீட்சி இது. முல்லை நில மாயோனுக்கும் இப்போது நீங்கள் சொல்லும் கண்ணபிரானுக்கும் (கிருஷ்ணன்) எந்தவித தொடர்புமில்லை. கண்ணபிரான் என்பது மட்டும் தமிழ்ப்பெயர்களாக இருக்கலாம். இப்படி இக்கதாபாத்திரத்திற்கு மொழிக்குமொழி பெயர் இருக்கிறது. ஆனால் இந்தக் கதாபத்திரத்தில் தமிழனின் கலாச்சார சித்தரிப்புகளே இல்லை. இதை தனியாக விவாதிக்கலாம். அந்த ஹிந்திக்கார யாதவர்களிடம் சென்று கண்னபிரான் என்றால் ஒன்றும் தெரியப்போவதில்லை, ஆனால் நம்மவூர் அறிவாளிகள் சகல பெயரையும் தெரிந்துகொண்டிருப்பார்கள். அப்படி தெரிந்துகொண்டு இதையும் அதையும் ஒட்டவைத்துக்கொண்டிருப்பார்கள். செய்யும் தொழிலை வைத்தாவது என்றால் ஓரளவு நேர்மையாக இருக்கும், ஆனால் கண்ணபிரான் வழியென்பது புராண கட்டுக்கதையன்றி ஒன்றுமில்லை. இப்படித்தான் குறிஞ்சித்திணை தலைவன் முருகனும் சிவனுக்கு மகனாகி பின் தேவேந்திரனின் பெண்ணை திருமணம் செய்துவைக்கப்பட்டு ஸுப்பிரஹமணி-யானது. தமிழர்களைத் தவிர்த்த எந்த ஹிந்து மதக்காரனுக்கும் முருகன் சிவனின் மகன் என்பதும் கணேசனுக்கு அண்ணனென்பதும் தெரியாது. மாயோனுக்கு மட்டும் இந்த கதி நேரவில்லை, தமிழர்களின் எல்லாவிதமான பண்பாட்டுக் கலாச்சாரத்தின் மீதும்தான் இப்போர் தொடுக்கப்பட்டிருக்கிறது. முல்லை நிலத் “தலைவன்” மாயோன் என்பதுகூட பின்னாளில் முல்லை நிலத் “தெய்வமாக” மாற்றம்பெற்றது எனலாம். முதலில் நாம் வணங்கும் கடவுள்களுக்கு நம் மொழியல்லாத பெயர்கள் எப்படி ஏற்பட்டது என்பதை வெகு சாதாரணமாக யோசித்தாலே இவை விளங்கும். உங்களுக்கு தெய்வ நம்பிக்கை இருந்தால் தமிழில் முல்லைநிலக் கடவுளுக்கு என்னென்ன பெயர் இருக்கிறதோ அவற்றை பரவலாக பலர் அறியச் செய்யுங்கள். வல்லமையிருந்தால் பிறமொழிக்காரர்களிடம் நம் அடையாளங்களை புகுத்தச் செய்யுங்கள். அதைவிடுத்து அவர்களின் அடையாளங்களை சுமந்து பரப்புவதைப்பற்றி அக்கறைப்படவேண்டியது தமிழர்களின் கடமை. பெரும்பாலானோருக்கு விழிப்புவர வாய்ப்பில்லைதான். கற்றவர்களுக்கே இது இல்லாதபோது பாமர மக்களின்மீது வருத்தப்பட்டு பயனில்லை. மெதுமெதுவாகத்தான் பரப்புரை தொடங்கும். 20 அல்லது 30 வருடங்களுக்கு முன்பு நம் முன்னோர்கள் யாரும் இப்படி தங்கள் பெயரின் பின்னால் யாதவ் என போட்டுக்கொள்ளவில்லை என்பதால் இப்போதுதான் இதன் பரப்புரை தேவைப்படுகிறது. 

02. /// தம்பி சின்ன பிள்ளை போல மீண்டும் மீண்டும் செய்யும் தொழில் ஒற்றுமையை வைத்து ஒப்பிட்டு பேசுவது அர்த்தமற்றது. செய்யும் தொழிலால் நாங்கள் ஒன்றுபட்டு இருக்கின்றோம் . ஆதலால் நாங்கள் யாதவர்கள் என்று யார் உம்மிடம் கூறியது. நீங்களாக ஓர் விளக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அதை சுட்டிகாட்டி விவாதிப்பது அர்த்தமற்றது. /// 

யாதவ் என தங்களை கருத்திக்கொள்ளும் பெரும்பாலான இடையர்களும் இந்த விளக்கத்தையே திருப்பி திருப்பிச் சொல்வதனால்தான் இக்கேள்விகூட எழுகிறது. செய்யும் தொழில் பதிலாக இல்லாதபோது இக்கேள்விக்கும் வாய்ப்பில்லை. 

03. /// ஆழ்ந்து நாம் சிந்திக்கும் வேளையில் இங்கே மதம் இனம் மொழி எல்லாமே அடிபட்டுவிடும் ! மனிதம் மட்டுமே எஞ்சி நிற்கும் ! சாதி மதம் மொழி கலாச்சாரம் அனைத்தையும் அல்லது ஏதேனும் ஒன்றி தூக்கி பிடிக்காமல் , மனிதத்தை மட்டும் ஏற்று வாழ் உங்களால் முடியுமா ? அல்லது நீங்களும் நானும் இடையனாக அடையாளப்பட்டு சொந்தகள் போல் உரிமையோடு பழகுவது பேசுவதில் என்ன சொந்த பந்தம் உள்ளது ? நாம் இருவர் என்ன ஓர் தாயின் பிள்ளைகளா ? அல்லது வேறேதாவது உறவு முறையா ? ஒருவனை ஓர் இனத்தோடு சம்மந்தமுள்ளவன் அல்லது சம்பந்தமற்றவன் என்று அறிவதற்க்கான வரையறை என்ன என்று கூறுங்கள் ! /// 

ஆழ்ந்து நாம் சிந்திப்பது என்பது மிகவும் அவசியமானது. பலசமயங்களில் அது மக்களுக்கு வசப்படாமல்போவதால்தான் நம்மை ஆழ சிந்திக்கவிடாதபடி செய்கிற அறிவுக்கு ஒவ்வாத தேவையற்ற கதைகளையெல்லாம் நம்பும்படியாகிறது. எல்லா அடையாளங்களையும் தவிர்த்தால் மனிதம் மட்டுமே எஞ்சி நிற்கும் என்பது உண்மைதான். ஆனால் நாம் தூக்கிச் சுமக்கும் அடையாளங்கள் நம்மைச் சுற்றியுள்ள மக்களை அறியாமையில் ஆழ்த்தாத வரையிலும் / அவர்களின் சிந்தனை வளர்ச்சியை தடுக்காத வரையிலும் எந்த அடையாளங்களையும் தூக்கிச் சுமப்பது தவறொன்றுமில்லை. மொழியால், மொழி வளர்ச்சியால், மொழி வளர்ப்பதால் பயனிருக்கிறது. அவ்வாறேதான் பண்பாடு கலாச்சாரத்தாலும். இந்த அடையாளங்க்களை ஒரு சமூகம் தவிர்க்கவேண்டிய அவசியமில்லை. இவற்றின்பேரால் மக்களை முட்டாளாக்கும் செயல்கள் தொடர்ந்தால் எதிர்த்துதான் ஆகவேண்டும். எதிர்ப்பது என்பது வேறு, தவிர்ப்பது என்பது வேறு. எந்தவொரு மனிதர்களையும் பாதிக்காமல் ஏமாற்றாமல் அவனை அறியாமையில் ஆழ்த்தாமல் ஒரு அடையாளம் வளர்க்கப்படுகிறது எனில் அது “மனிதம்” தானே. அதற்கு மாறாக இருந்தால் மனிதமற்றது என ஒதுக்குவதுதான் நியாயம். 

ஆதியிலிருந்தே மனித இனம் குழுக்களாக வாழ்ந்ததுதான். உங்களுக்கும் எனக்குமான நேரடி உறவு என்பது ஒன்றுமில்லை. இந்த தமிழ்ச்சமூக வரலாறு நம் இருவரையும் ஒரு புள்ளியில் ஒரு பெயரால் ஒரு அடையாளத்தால் ஒரு மொழியால் இணைத்திருக்கிறது. பிற எந்த மொழி குழுக்களைவிடவும் பெரும்பாலான வாழ்வியல் முறைகள் நமக்கு ஒத்திருக்கும். ஒரு இனக்குழுவின் எல்லை என்பது மொழிதான். இன்றைக்கு மாநிலங்கள்கூட மொழியின் அடிப்படையில்தான் பிரிக்கப்பட்டது. ஒரு சாதிக்குழுவின் கலாச்சாரத்தின்மீது மதத் தாக்கத்தைவிட மொழியின் தாக்கமே அதிகமாக இருக்க முடியும். இதன்மீது இடைவெளி அதிகம் இருக்கும்போது நீங்களும் நானும் வேறுதான். மற்றவர்களும் வேறுதான். இப்படி இருக்கும் ஒரே மொழிக்காரர்கள் எல்லோரும் ஏன் ஒன்றாக அடையாளப்பட முடியாது என்றால் அவரவர்களும் நிலப்பரப்புக்கேற்ற செய்தொழிலுக்கேற்ற சற்று வேறான ஒரு வரலாறுப் புள்ளியில் ஏற்கெனவே இணைந்திருப்பதால்தான். இதில் யாரும் யாரையும்விட மேலானவர்களுமில்லை, கீழானவர்களுமில்லை. “அந்தணன் (சான்றோர்) / அரசன் / வணிகன் / வேளாளன்” என மேலோன் கீழோனின்றி நான்கு வகையாக இக்குழுக்கள் தமிழ்ச்சமூகத்தில் எவ்வாறு தோன்றியது என்பதை நோக்குங்கால் இதில் கட்டுக்கதைகளுக்கும் வீண் பெருமைகளுக்கும் இடமில்லை என்பது தெள்ளத்தெளிவு. 

04. /// முதலில் இங்கு வாழும் தமிழர்களுக்கிடையே எப்பேர்பட்ட கலாச்சார முரண்பாடு உள்ளது என அறிந்து கொண்டு பேசுங்கள் ! கலாச்சாரம் என்பது வாழும் இடத்திற்கு ஏற்றவாறு மாறுபடக் கூடியது ! இங்கே அனைவரும் தமிழன் தான் ! அனால் அனைவருக்கு ஒரே மாதிரியான கலாச்சாரம் உண்டென்று கூற முடியுமா ? இந்துவும் கிறிஸ்துவும் முஸ்லீமும் ஒரே வகையான பண்பாட்டுடனா வாழ்கின்றனர் ! மூவருக்கும் வெவ்வேறான கலாச்சாரம் ! அதற்காக அவர்களை தமிழர்கள் இல்லையென கூற முடியுமா ? /// 

கடந்த காலத்திலேயே தனித்தனி செய்தொழில் அடிப்படையிலான வாழ்வியல்முறைகள் ஒவ்வொரு குழுவுக்கும் இருந்துவந்ததனால் எல்லோரும் தமிழர்கள் என்றாலும் ஒரே பழக்கவழக்கம் இருக்க வாய்ப்பில்லைதான். இதுகூட சற்றேறக்குறையதான் மாறுபடுமேயொழிய பிற மொழிக்காரர்களுக்கும் நமக்குமான இடைவெளியோடு இருக்க வாய்ப்பில்லை. ஒரு குழுக்களின் கலாச்சாரம் என்பது அவர்களின் சிந்தனைகளின் மீது எது ஆதிக்கம் செலுத்துகிறதோ அதைப் பொறுத்து மாறுபடக்கூடியது. நீங்கள் குறிப்பிடும் ஹிந்து முஸ்லீம் கிறித்தவம் எல்லாம் இதனடிப்படையில் ஒரே பண்பாட்டுடன் வாழ வாய்ப்பில்லை. மக்களை கூட்டமாக அடிமைப்படுத்த நினைப்பவர்களுக்கு மதம்தான் எளிய ஆயுதமாக இருந்ததால் மக்கள் கூறுபடுத்தப்பட்டார்கள். ஆனாலும் ஒரே மதம் என்றாலுங்கூட ஒவ்வொரு மொழியின் கலாச்சாரத்தாலும் அது வேறுபடவே செய்யும். இன்றைக்கும்கூட ஹிந்துக்கள் என்று ஒரே பெயரில் அழைக்கப்படுகிற தென் ஹிந்தியர்களும் வட ஹிந்தியர்களும் தங்கள் வருடப்பிறப்பை வெவ்வேறு நாளில்தான் கொண்டாடுகிறார்கள். ஆனால் பிற மதத்தினர்கள் அப்படியில்லை. இதன் வரலாற்றை ஆராய்ந்தால் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் மதத்தால் பிரிக்கப்படாமல் மொழியாலே கூடி வாழ்ந்திருக்கிறார்கள் என்பது விளங்கும். இதிலிருந்தே மொழிதான் ஒரு குழுவின் எல்லை என்பது நிதர்சனமாகிறது. 

05. /// பொதுவான மொழி ! அதென்ன பொதுவான மொழி ? ஆங்கிலம் பொதுவான மொழிதான் ! ஆங்கிலம் பேசத் தெரிந்த மக்கள் அனைவரும் ஆங்கிலேயன் என கூறுகின்றீரா ? தேவையில்லாமல் மொழி கலாச்சாரம் தொழில் ஆகியவற்றை வைத்து நீங்களே கேள்வியெழுப்பி அதற்க்கு நீங்களே பதிலளித்து கொண்டிராமல் , சிதறி கிடக்கும் சமூகத்தை எப்படி ஒன்றிணைத்து வளர்ச்சி காண்பதென்ன யோசியுங்கள் அதற்க்கான கருதுகோள்களை பதிவிடுங்கள் ! /// 

மனிதன் பரவிப் பெருக பெருக பலமொழிகள் உருவானது. ஒரே மொழியுடைவர்கள் உலகெங்கும் ஒன்றாகத்தான் கூடி வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைக்கும் கூடி வாழ்கிறார்கள். “எதுவரையில் ஒரு மொழி நீள்கிறதோ அதுவரையில் உன் இனம்” என்ற பாவாணர் கூற்றை கவனியுங்கள். மொழிதான் ஒரு மனிதனின் அடிப்படை அடையாளம். அதன்பொருட்டு வருவதே மற்றதெல்லாம். பொதுமொழி என்பதன் பொருளே அங்கு ஏற்கெனவே இருக்கும் வெவ்வேறு மொழிக்காரர்களை பயன்பாட்டின் அடிப்படையில் இணைப்பது என்பதுதான். அவரவருக்கு ஒரு மொழி இருக்கும்போது யாரும் பொதுமொழியால் அடையாளம் செய்துகொள்வதில்லை. அப்படி செய்பவன் அறிவிலியாகத்தான் இருப்பான். இதனடிப்படையில் ஆங்கிலம் பேசத்தெரிந்தவனெல்லாம் அங்கிலேயனாகிவிட முடியாதுதான். மொழி கலாச்சாரம் தொழில் பற்றி கெள்வியெழுப்புவது எல்லாம் தேவையற்றதல்ல, மிகவும் தேவையானதுதான். ஒவ்வொரு மொழிக்காரனுக்கும் ஒவ்வொரு பிரச்னை. மொழிசார்ந்த மக்களுடன் கூடித்தான் அவரவர் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள முடியும். நம் வரலாறு தெரியாத வேற்று மொழிக்காரனால் நம் பிரச்னைக்கு எப்படி தீர்வளிக்க முடியும்? இன்னொரு மொழிக்காரனின் வரலாறு தெரியாமல் நம்மால் எப்படி அவர்களின் பிரச்னைக்கு தீர்வளிக்க முடியும்? கருத்துக்கள் அனைவரையும் சேரவேண்டுமெனில் எதையும் திரும்பத் திரும்பத்தான் பேசியாக வேண்டும். கருத்துக்களால் ஒன்றிணைக்க முடியாமல் ஒரு சமூகத்தை எப்படி ஒன்று சேர்த்துவிட முடியும்? பாழ்பட்டுக்கிடக்கும் வேருக்கு மருத்துவம் செய்யாமல் கிளைகளுக்கு மருத்துவம் செய்வதால் ஆகக்கூடிய பயன் என்ன? எத்தனை காலங்கள் கழிந்தாலும் எல்லா அமைப்புகளும் ஒரே கூப்பாடு போடுவது எதனால்? சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் செயற்பாடுகளில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்? அது நீடிக்குமா? கடந்த கால சங்கங்களின் வரலாறல்லாவா அதற்கு சாட்சி. நம் வரலாறுதான் நம் மொழியின் வரலாறு. தன் தாய்மொழியுணர்வே ஒருவனிடம் வராதபோது வேறெந்த உணர்வுதான் வந்து என்ன ஆகப்போகிறது? மண்குதிரைகளைக் கூட்டி சவாரியில் கலந்துகொள்ள இயலுமா? 

06. /// நம் இருவருக்குள்ளும் இருக்கும் ஓர் ஒற்றுமை கண்ணபிராண். மற்றொன்று குலப் பெயர்கள் ! நீங்கள் கூறும்படி வட இந்திய யாதவர்களும் தென் இந்திய இடையர்களும் வெவ்வேறு இனக்குழு எனில் - யார் இந்த கண்ணபிரான் ? தென் இந்திய திராவிடனா ? வட இந்திய ஆரியனா ? திராவிடன் எனில் வட இந்திய ஆரிய யாதவர்கள் கண்ணபிரானை தங்கள் குலத்தில் தோன்றியவன் என சொந்தம் கொண்டாடுவதை எதிர்த்து நீங்கள் பிரசாரம் செய்ய வேண்டும் ! கண்ணனை வணங்குங்கள் அனால் உங்களின் குலத்தில் பிறந்தவன் என உரிமை கூறாதீர் என போராட வேண்டும் ! காரணம் தென் இந்திய திராவிட கண்ணனை இடையர்களின் குலத் தோன்றலை அவர்கள் எப்படி உரிமை கொண்டாடலாம் ? அவர்களும் நாமும் வேறு என நிருபிப்பதற்கு இது ஒரு முறை ! மற்றொரு முறை என்னவெனில் தென் இந்திய இடையர்குல மக்களிடையே கீழ் கண்டவாறு விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும் , அதாவது கண்ணபிரான் என்பவன் வட இந்திய ஆரிய யாதவன் , அவனுக்கும் முல்லை குடிகளாகிய இடையர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை ! அவனை வணங்குவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் , உரிமை கோரதீர் ? அவர் ஐரோப்பியாவில் இருந்து கைபர் போலன் கனவாய் வழியே ஆடு மாடுகளை மேய்க்க ஊடுருவிய ஆரிய இனக்குழுவை சேர்ந்தவன் ! என பிரசாரம் செய்யுங்கள் ! உங்கள் கூற்றுப்படி யாதவர்களும் இடையர்களும் வெவ்வேறு இனக்குழு எனில் , மேற்கண்ட இரண்டில் ஒன்று நிச்சயம் உண்மையாக இருக்க வேண்டும் ! அதை முன்னிறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் ! அதை விடுத்து தேவையற்ற மொழி பண்பாடு கலாச்சாரம் தொழில் போன்ற ஏற்ப்புடையதற்ற காரணிகளை நீங்களாக எடுத்துக்கொண்டு பயனற்ற பிரசாரத்தை செய்யாதீர் ! /// 

கண்ணபிரானைப் பற்றி மேலே குறிப்பிட்டுவிட்டோம். கண்ணபிரான் என்பது தமிழ்ப்பெயர் மட்டுமே. அதன் பெயரால் நீங்கள் குறிப்பிடப்படுபவர் முல்லைத்திணை தலைவன் மாயோன் என்றால் நமக்குப் பிரச்னையில்லை. ஆனால் அப்படிக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்வது வழக்கத்திலில்லை. அது கிருஷ்ணனைத்தான் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கிருஷ்ணன் என்பவன் ஆரியப் புராணங்களில் படைக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம். அவன் ஆரியன்தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கொள்ளத்தேவையில்லை. ஆடு மாடு மேய்க்கும் யாதவன் எவனும் ஹிந்து மதத்தில் பூணூல் அணிவதில்லை. அந்த வழக்கம் வடஹிந்திய யாதவர்களிடத்தில் இன்றைக்குமில்லை. மேலும் அவனது சிந்தனை; செயற்பாடு; கருத்துக்கள்; அவனை சித்தரிக்கும் பாங்கு எதுவும் பழங்கால தமிழர்களின் பண்பாட்டோடு ஒத்துப்போகவில்லை. அவனைப் பற்றிய எந்தவொரு குறிப்பும் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. சமணமும் பௌத்தமும் வீழ்ந்து சைவமும் வைணவமும் எழுந்த பின்னரும், தமிழில் பக்தி இலக்கியம் தோன்றிய பின்னரும்தான் அவனைப் பற்றின குறிப்புகள் வருகிறது. இதுமட்டுமன்றி யது என்பவனைப் பற்றிய எக்குறிப்பும் தமிழில் கிடையவே கிடையாது. காடும் காடு சார்ந்த நிலப்பரப்பான முல்லை நிலப்பரப்பில் மேய்ச்சல் தொழிலை மேற்கொண்டு வாழ்ந்த இடையர்களின் தலைவனான மாயோன் தமிழன்தான், ஆரியனில்லை. (ஆரியரல்லாதோர் என்பதைக் குறிப்பிடுவதே திராவிடம்). மலைகளே இல்லாத வட ஈழம் இன்றைக்கும் முல்லைத்தீவு என வழங்கபடுவது அவ்வரலாற்றின் சாட்சி. 

அடுத்ததாக குலப்பெயர்கள் என்கிறீர்கள். “இடையன் / யாதவன்” என்ற பெயர்களுக்கான வரலாறை நாம் கசடற தெளிந்தாலே ஏராளமான உண்மைகள் விளங்கும். பலவகையிலும் இந்த பெயர்களுக்கு ஒற்றுமையில்லை என்பதை ஆணித்தரமாக நிறுவ முடியும். அதை பிறகு தனியான பதிவுகளில் பார்ப்போம். (கட்டாயம் பதியப்படும்) 

மரணத்தின் மீதான பயமும், வாழ்வின் மீதான ஆசையும், அறியாமையும் ஒருவனுக்கு கடவுளை அறிமுகப்படுத்துகின்றன. மன தைரியம் உள்ளவனிடம் அவரால் உயிர்வாழ முடியாது. எல்லோரும் கடவுளுக்கும் ஒரு வரையறை வைத்திருக்கிறார்கள். கோழிக்கறியும் ஆட்டுக்கறியும் வாழ்நாள் முழுதும் கட்டாயமாக உண்ணக்கூடாது என மிகத்தீவிரமான கட்டுப்பாடு எழுந்தாலே கடவுள் காணாமல் போய்விடுவார். அவ்வப்போது தன் வசதிக்கேற்ப விதிமுறைகளைத் தளர்த்திக்கொண்டுதான் கடவுளையும் காப்பாற்றிவருகிறார்கள் மக்கள். ஒரு குழந்தையை பிறப்பிலிருந்தே அச்சமூட்டாமல் மன தைரியத்தோடு வளர்த்தால் அது ஒருபோதும் கடவுளிடமும் மதங்களிடமும் தஞ்சமடையாது. இயல்பிலேயே அவ்வாறு இல்லாமல்போவதால்தான் கடவுளை வணங்கவேண்டிய கட்டாயத்திற்கு ஒரு மனிதன் ஆளாகிறான். எதற்காக நாம் கடவுளை வணக்குகிறோமோ அதன்மீதான நம் அறியாமை விலகும்போது அவரும் விலகிப்போய்விடுவார். நோய் வந்ததும் கோயிலுக்குபோன காலம் மாறி கோயிலைக் கடந்து மருத்துவமனைக்கு செல்வதும், சக்திவாய்ந்த சாமிக்கு கோயிலைக் கட்டி வாசற்கதவு வைப்பதும் கதவைப் பூட்டுவதும்தான் யதார்த்தமான வாழ்வியல். தன் சுய விருப்பு வெறுப்புகளை தொந்தரவு செய்யாத வரையறையோடு உள்ளவரைதான் கடவுளுக்கும் மதிப்பு மரியாதை. அது இருக்கிறதோ இல்லையோ என்று தெரியாமல்போனாலும், 'நமக்கு எதற்கு வம்பு? ஒரு கும்பிடு போட்டு வைப்போம்' என்பதுதான் இங்கு பலரது பக்தி. இப்படியாக நம் மக்களுக்கும் ஒரு கடவுள் தேவைப்படுகிறார். பழந்தமிழர்களுக்கு அது மாயோனாக இருந்தது. அவர் நம் முன்னோர்களிடையே சிறப்பாக வாழ்ந்தவராக இருக்கலாம். பின்னர் சாதிக்குழுக்களின் தொகைப் பெருக்கத்தால்தான் பங்காளி குழுக்கள் உருவானது. ஒவ்வொரு பங்காளி குழுக்களுக்கும் ஒரு குலதெய்வம் உருவானது. இத்தெய்வம் பெரும்பாலும் பெண் தெய்வங்களே. நாம் ஒரே சாதிக்குழு என்றாலும் தமிழர்களில் ஒரு சாதிக்கு ஒரே குலதெய்வ வழிபாடு என்பது இன்றைக்கு கிடையாது. மாறாக ஒவ்வொரு பங்காளி குழுக்களுக்கும் ஒரு குலதெய்வ வழிபாடு இருக்கும். குழந்தைகளுக்கு காதுகுத்து எல்லாம் இங்கேதான் நடத்துவார்கள். ஏனைய சுப காரியங்களும் இப்படித்தான். நாளடைவில் திணைத் தெய்வ வழிபாடு இப்படி குலதெய்வ வழிபாடாக மாறியது. (கண்ணபிரான் என்பவர் குலதெய்வம் அல்லர். அவர் பெருந்தெய்வ வழிபாட்டுக் கடவுள்.) வாழ்ந்தவர்களை மனதில் நினைத்து மதித்து மரியாதையை செலுத்திய தமிழர் வழிபாட்டில், அர்த்தம் தெரியாமல் மந்திரங்களை சொல்லி வணங்கும் முறை ஏற்பட்டதுபோல் நாளை நம் காலத்திலும் பலவும் மாறலாம், மறையலாம். பழந்தமிழர்களின் வழிபாட்டில் ஒரு நேர்மை இருந்தது. உற்பத்திப் பொருட்கள் அதிகமாக விளைந்தபோதே திருவிழாக்கள் ஏற்படுத்தப்பட்டன. பின்னாட்களில் அது சிலரின் சுயநலத்துக்காக மாற்றப்பட்டது. போதிய பொருளாதார கட்டுமானம் வகுத்துக்கொள்ளாத இச்சமூகம் இன்று லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து திருவிழாக்களை விமரிசையாக செய்வதொன்றையே வருடாவருடம் மாபெரும் நோக்கமாக கொள்ளும்போது அதை மேலும் ஆதரிப்பது நன்மையா? அறிவியல் வளர்ந்த காலகட்டத்திலும், எல்லாவற்றுக்கும் இயற்கையை பிரமித்து நின்ற ஆதிமனிதனின் பல புதிர்களுக்கு விடை தெரிந்த இக்காலகட்டத்திலும் பக்தி என்ற பேரில் கோயில் பணிகளுக்காகவே தங்கள் ஆற்றலை செலவழிக்கும் இளைய சமுதாயம் வேறெங்காவது இருக்கிறதா? இதனால் அறியாமை வளர்கிறதா? நீங்குகிறதா?

தமிழர்கள் மூத்த இனம் என்பது வரலாறு அறிந்ததே. அப்படியிருக்கையில் நம் வரலாறை வடக்கத்தியர்களுக்கும் பிற மொழிக்காரர்களுக்கும் எடுத்துச் சொல்லி நம் அடையாளங்களையும் சங்ககால இலக்கிய நீதிக்கருத்துக்களையும் குறளையும் பெருமையாக அவர்கள் ஏற்கும்படி பரப்புரை செய்வதை விடுத்து, நம் வரலாறுகளின் மீது துளி அக்கறையுமின்றி மூடி புறந்தள்ளி அடுத்தவன் அடையாளத்தை பூசிக்கொள்வதுதான் அறிவுடைமையோ? அடுத்தவர்களுக்கு நம் வரலாற்றை எடுத்துச் சொல்லாவிடினும் அடுத்தவர் அடையாளத்தை நம் மக்களின் மீது வளர்த்தெடுக்க துணைபோகாமல் இருப்பதாவது நம் முன்னோர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியன்றோ? 

எது விழிப்புணர்வு? எங்கிருந்து உருவாகும் விழிப்புணர்வு? அறிவுக்கு ஒவ்வாத மடமைகளை ஊற்றாய் வெளிக்கொணரும் மதக்கருத்துக்களையும் புராணப் பித்தலாட்டங்களையும் நம்பி பின்னால் சென்று பரப்புவதா பயனுள்ள பிரச்சாரம்? தமிழ்ப் பழங்குடி சமூகத்தின் சொந்த அடையாளங்களை காக்க முற்படுவதா பயனற்ற பிரச்சாரம்? 

பதிவேடுகளில் “யாதவர்” என நம்மை அரசாங்கம் அடையாளப்படுத்தியாகிவிட்டது. இனி அதை மாற்றுவது கடினம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அப்பெயருக்கு ஆபத்து வரப்போவதில்லை. அந்த அடையாளம் இருக்கவே செய்யும். ஆனால், “ஆயர் – கோனார் -இடையர்” என்ற அடையாளங்களை காப்பாற்றப்போவது யார்?

1 comment:

  1. உங்களை போன்றோர் வேண்டும் உண்மையை உரக்க சொல்ல..,சூழ்ச்சிகளை வெல்ல

    ReplyDelete