Friday 26 September 2014

ஒரு போராட்டம் எப்போது வலுப்பெறும்?

முதலாளிகளும் பணக்காரர்களும் மனிதாபிமானவற்றவர்களும்தான் சமூகத்தை தீர்மானிக்கிறார்கள். கடவுளும் அதை காக்கும் மதமும் அவர்களுக்கு அடியாளாய் உதவி செய்கிறது. எல்லாமே கடவுளாலும் விதியாலும்தான் நடக்கிறது என்பதை ஒருவன் நம்பும்போதே அவன் எந்தவொரு போராட்டத்தின் மீதும் நம்பிக்கையற்றவனாக ஆகிறான். போராடும் எண்ணமே அவனுள் எழாதபோது முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும் மதவாதிகளுக்கும் தானாகவே இன்னும் பலம் கூடுகிறது. போராடும் எண்ணமில்லாத சமூகம் ஒட்டுமொத்தமாக அடிமையாகிறது. என்னதான் கொடுமை நடந்தாலும் விதியின் பேரால் தனக்குத்தானே ஒரு நியாயம் கற்பித்துக்கொள்ளும் மனநிலைகொண்ட தலைமுறை உருவாகிறது. கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஈடாய் நாத்திகம் ஓங்கும்போதுதான் போராட்டமும் புரட்சியும் வெளிப்படுகிறது. இவை ஒழியாத எந்தவொரு சமூகத்திலும் தீவிர போராட்டங்கள் வெடிக்க சாத்தியமில்லை. "கவலைப்படாதீர்கள், நம் மதம் இருக்கும்வரையில் இந்த மண்ணில் கம்யூனிசப் புரட்சி வராது" என்று பார்ப்பனர்கள் கூட்டத்திலே ராஜாஜி பேசியது சிந்திக்கத்தக்கது. ஒரு சமூகம் தனது இந்த நிலைக்கு யார் காரணமோ எது காரணமோ அதை எதிர்த்து போராட்டத்திற்கு தயாராகாமல் விதியின் மீது கவனமும் நம்பிக்கையும் வைத்தால் எந்த மாற்றம்தான் சாத்தியப்படும்? தலைவிதியை மறுக்கும்போதே போராட்டங்கள் வலுப்பெறும். நாத்திகமே தலைவிதியை மறுக்கவைக்கும். அறியாமையில் கிடக்கும் மக்களுக்கு சீரிய சிந்தனைகளே பாதுகாப்பு. ஒரு சமூகத்தின் புரட்சி அச்சமூகத்தில் வாழும் முற்போக்குவாதிகளைப் பொருத்ததே. அல்லது கடவுள் மீதும் தலைவிதி மீதும் நம்பிக்கை வைக்காதவர்களைப் பொருத்ததே. மதத்துக்கும் கடவுளுக்கும் ஆபத்து நேரும்போது மட்டுமே ஒரு மதவாதி போராடுகிறான். இதன் உளவியல் என்னவெனில், இவ்விரண்டின் மீதும் அவனுக்கு நம்பிக்கை வராதபோது அவன்கூட போராட்டத்தைத்தான் நம்புகிறான். ஆக போராட்டம் என்பது எதன் மீதும் நம்பிக்கையற்று நம்மைப் போன்ற உணர்வாளர்களின் ஆற்றலும் சிந்தனையும் ஒன்றுபடும்போதுதான் வலுப்பெறுகிறது. போராடினால் மட்டுமே எதையும் மாற்ற முடியும் என்பதே மிகத் தெளிவான உண்மை. எனவே உங்கள் நம்பிக்கைகளை உங்கள் சிந்தனையின் மீதும் செயல்பாட்டுகளின் மீதும் வையுங்கள். போராட ஒன்றுகூடுங்கள்...!

No comments:

Post a Comment