Friday 26 September 2014

நோக்கம் ஒன்றேயெனில் இத்தனை அமைப்புகள் ஏன்?

நம் சமூகத்திற்காக அமைப்புகள் நடத்தும் பலரும் தங்கள் அமைப்புகளில் சேர விருப்பமுள்ளவர்களின் தகவல்களை தெரிவிக்குமாறு அடிக்கடி முகநூலில் அறிவிக்கிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் அவ்வாறே அங்கே வந்து தங்களைப் பற்றி தெரிவிக்கிறார்கள். இது தவறில்லைதான், ஆனால் அதற்கு முன் படித்த இளைஞர்களாகிய நாம் யோசிக்க வேண்டியது என்னென்ன?

1. அமைப்பு தொடங்கப்பட்டதன் காரணம் என்ன?

2. அமைப்பின் குறிக்கோள் என்ன?

3. அமைப்பின் தலைமை யார்? அவர் விவரம் என்ன? அவர் என்ன வேலை செய்கிறார்? வருமானம் என்ன? பொருளாதார அரசியல் பின்னணி என்ன? நன்னடத்தை உடையவரா? உண்மையிலேயே யாதவர்தானா? உள்ளூரில் அவருக்கு மதிப்பிருக்கிறதா? பிறரை வழிநடத்தும் தகுதியும் திறமையும் அறிவும் தெளிவும் அக்கறையும் இருக்கிறதா? யாருக்கேனும் அரசியல் அடியாள் வேலைக்காக செயல்படுகிறாரா? இதற்கு முன்னர் இச்சமூகத்திற்காக அவர் செயல்பாடு என்ன?

4. தலைமையுடன் செயல்படுபவர்கள் யார்? அவர்களின் விவரம் என்ன?

5. அமைப்பு எப்போது தொடங்கப்பட்டது? எவ்வளவு பேர் இணைந்திருக்கிறார்கள்? இதுவரையில் அவர்களின் செயற்பாடுகள் என்ன?

6. இதற்கு முன் தொடங்கப்பட்டுள்ள அமைப்புகளில் ஏன் அவர்கள் இணையவில்லை? இதற்காக சொல்லப்படும் காரணங்கள் உண்மையா?

7. நம் மக்களின் நடைமுறை பிரச்னைகளுக்கு இவர்களிடம் உண்மையிலேயே தீர்விருக்கிறதா?

8. சாதியால் இவர்களுக்கு லாபமா? இவர்களால் சாதிக்கு லாபமா?

9. எதையும் சட்டரீதியாக எதிர்கொள்ளும் வலிமை இவர்களிடம் இருக்கிறதா?

10. எச்சமூகத்திடமும் பகை பாராட்டாமல் சாதுரியமாக காரியம் சாதிக்கும் விவேக அரசியல் ஞானம் உள்ளவர்களா? அல்லது கற்பனாவாத / வாய்ச்சொல் வீரர்களா?

11. தியாக மனப்பான்மை உள்ளவர்களா? நம்பி வரும் மக்களையும் இளைஞர்களையும் சுயலாபத்திற்காக அடகுவைக்காத பற்றுடையவர்களா?

இப்படி இன்னும் ஏராளம் சிந்திக்க வேண்டியுள்ளது. பலரையும் நம்பி நம்பி கடந்த காலத்தில் நாம்பட்ட அவமானங்கள் ஏராளம். இதனால் கிராமங்களில் நம் மக்களுக்கு சங்கமென்றாலே நம்பிக்கையற்றதாகிவிட்டது. மக்களின் நம்பிக்கை குலையவும் ஒற்றுமை வராமல் போகவும் பழைய தலைமைகளுக்கும் சங்கங்களுக்குமே பங்குண்டு. இனி ஒரு நல்ல வலுவான தலைவன் உண்மையிலேயே தோன்றினால்கூட யாரையும் அடையாளம் கண்டு ஆதரிக்குமளவுக்கு மக்கள் தயாரில்லை. யாருடைய பின்னணியும் நாம் அறியாமல் விடுவதால்தான் யாதவர் அல்லாதவர்களும் வேற்று மொழிக்காரர்களும் சுலபமாக நம்மை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

மேலும் அவரவரின் தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் பகிர்வது சரியானதல்ல. ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் தனிச்செய்தியில் விவரம் தெரிவியுங்கள், பெறுங்கள். இதைக்கொண்டு யார் வேண்டுமானாலும் உங்கள் முகவரியையும் கைபேசி எண்ணையும் தவறாகவோ போலியாகவோ பயன்படுத்தக் கூடுமன்றோ? தலைமையென்பது ஒவ்வொரு செயலிலும் கூர்மையான கவனத்தோடு நடந்துகொண்டால் நல்லது.

நன்றி நண்பர்களே. 
தயவுகூர்ந்து பலர் அறிய இதை பகிருங்கள்...

No comments:

Post a Comment