Wednesday 1 October 2014

கம்யூனிசம் தோற்றுப்போனதா?

சகல மக்களின் ஏற்றமும் தாழ்வும் சக மக்களின் உழைப்பைச் சுரண்டும் சூழ்ச்சிக்காரனாலேதான் ஏற்படுகிறது. கடவுள், தலைவிதி என்று ஏதுமில்லை. மக்களின் அறியாமையைக்கொண்டே அவர்களை பலாத்காரப்படுத்தி வைக்கவே இவைகள் உண்டாக்கப்பட்டன. முதலாளித்துவவாதிகளின் பலம் இதிலேதான் இருக்கிறது. மார்க்சியம் என்பது அறிவியல். சகல மக்களும் மாற்றத்திற்கான அவசியத்தை உணரும்போதே இது சாத்தியம். கம்யூனிசத்தின்பேரில் அரசமைத்த நாடுகளின் ஆற்றலையெல்லாம் தன்னுடன் மோதி அழிப்பதிலேயே கவனமாய் காவு வாங்கிக்கொண்டது முதலாளித்துவம். இருந்தும் அது அரசாண்டவரையில் பிற நாட்டு வளர்ச்சிகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். மக்களின் அறியாமை முற்றிலுமாக விலகவேண்டும் என்ற அக்கறையில் ஆதாயம் கருதாமல் உலகில் எங்கேனும் கட்சியோ இயக்கமோ முதலாளித்துவவாதிகளால் நடத்தப்படுகிறதா? இருக்காது. மக்களின் அறியாமைதான் அவர்களின் சொகுசு வாழ்வின் அட்சய பாத்திரம். ஆனால் எவ்வித ஆதாயமும் கருதாமல் உடல் பொருளையும் இழக்கும் தியாக மனப்பான்மையோடு உலகில் ஏராளமான கம்யூனிச இயக்கங்கள் இருக்கின்றன. பல நூற்றாண்டு கொடுமைகளை, சுரண்டல்களை, அறியாமைகளை 200 ஆண்டுகால மார்க்சியம் உடனடியாக வெல்லும் என்று எதிர்பார்ப்பதும்; வெல்லவே முடியாது என்று கட்டியம் கூறுவதும் நியாயமில்லை. வளரும்போதே சதி செய்து அதை வீழ்த்தும் மனசாட்சியற்ற முதலாளித்துவத்தின் முன்னால் போராடி வெற்றி பெறுவது எளிதல்ல. இன்றைக்கு பல நாடுகளிலும் கம்யூனிசத்தின்பேரால் பல வடிவங்களில் பிழைப்புவாத அரசியல் செய்ய வந்துவிட்டார்கள் பல முதலாளித்துவவாதிகள். இதுவும் திட்டமிட்ட சதி. இதனாலேயே ஆழ உணராத மேலோட்டமான தன் ஆதரவாளர்களிடம் கம்யூனிசம் ஏமாற்றத்தை கொடுத்துவிட்டது எனலாம். கம்யூனிசம் தங்களுக்கு எவ்வளவு பெரிய ஆபத்து என்பது ஏமாற்றுக்காரர்களுக்குத் தெரிகிறது, ஆனால் இது எவ்வளவு பாதுகாப்பு என இன்னும் மக்களுக்குத் தெரியவில்லை. பூரணமாய் இருந்தவரையில் குறுகிய காலத்திலேயே அந்தந்த நாடுகளில் கம்யூனிசம் சாதித்தது ஏராளம். இந்த நூற்றாண்டோடு உலக வரலாறு முடிந்துவிடவில்லை. இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுமே முதலாளித்துவ சுரண்டலை தம் மதத்தின் பேரால் காப்பாற்றியாக வேண்டிய அடியாட்களாகவே வளர்க்கப்படுகிறது. கம்யூனிசத்தை வளர்க்க எந்தக் குழந்தைகளும் இயல்பிலேயே வளர்ப்பில் தயாரிக்கப்படுவதில்லை. அது தானாய் தன் அறிவைத் தேடலை மதங்களைத்தாண்டி வளர்த்துக்கொண்டாலொழிய கம்யூனிசத்திற்கு ஆதரவு என்று உருவாக வாய்ப்பில்லை. முதலாளித்துவம் தன் அடியாட்களை இயற்கையிலே சர்வ வல்லமையோடு இப்படியாக தயாரித்துக்கொண்டிருக்க கம்யூனிசம் தோற்றுப்போனது எனக் கருதுபவர்களின் அரசியல் அறிவை நாம் எங்ஙனம் விமர்சிப்பது?

கம்யூனிசம் தோற்கவில்லை...
முதலாளித்துவத்திற்கு மாற்று கம்யூனிசமே...!

No comments:

Post a Comment