Tuesday 21 October 2014

சூரிய சந்திர கிரகணங்களை மனிதன் முன்கூட்டியே கணித்தது எப்படி?

ஒருகணம் கண்ணை மூடி ஆதிகாலத்திற்குச் செல்லுங்கள். ஆதியிலிருந்து படிப்படியாக நாகரிகத்தில் வளர்ந்த மனிதன் ஒரு காலகட்டத்தில் கணித சிந்தனைக்குள் நுழைகிறான். எல்லாவற்றையும் ஏதோவொரு கணக்குக்குள் கொண்டுவருகிறான். அதன் நீட்சியாய் இயற்கையாய் அவன் கண்ட இரவுபகலை வகுக்க ஆரம்பிக்கிறான். நாட்களை வரையறுக்கிறான். நாழிகை அளவீடுகளால் நாட்களை பிரிக்கிறான். பின் இதனடிப்படையில் படிப்படியாய் ஜாமம், வாரம், மாதம், பருவகாலம், வருடம் என கணிதம் விரிகிறது. காடுகளின் நடுவே விலங்கோடு விலங்காய் வாழ்ந்த அவனுக்கு அப்போது பெரும் அச்சத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது என்னவென்றால் இயற்கையாக அவனோடு வாழ்ந்த வானம், சூரியன், நிலா, மழை, வெயில், இடி, மின்னல், விண்மீன்கள், மரணம் இவைகள்தான்.

உணவுதேடி பூமியில் உழைத்துவிட்டு இரவில் வானமே கூரையாய் படுக்கும்போது நாள்தோறும் அவனது கவனம் வானத்திலேயே குவிந்திருக்குமென்பது இயல்புதான். எல்லா காலகட்டத்திலும் அவ்வப்போது ஒரு அதிக கூர்மையான சிந்தனை படைத்தவன் வாழ்ந்துதான் இருப்பான். அப்படி ஒருவன் தொடர்ச்சியாக இந்த இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து அவதானித்திருப்பான். தினசரி நகரும் நிலவையும் சூரியனையும் விண்மீன்களையும் பற்றி சிந்தித்த அவன் அதைப்பற்றிய ஆவலை தன் உணர்வையொத்த சக மனிதர்களிடம் அறிவித்து ஒரு குழுவாய் பல வருடங்களாய் பரம்பரையாய் அதன் நகர்வுகளை பின்தொடர்ந்திருப்பார்கள்.

இன்றைக்கு நாம் சாதாரணமாக கருதும் ஒவ்வொரு அறிவியல் உண்மைகளின் பின்னாடியும் பல நூற்றாண்டுத் தேடல் இருப்பது யோசிக்கத்தக்கது. இப்படி தொடர்ச்சியாய் கணித அறிவோடு இயற்கையை கவனித்தபோது, அவ்வப்போது சூரியன் சற்றுநேரம் இருளடைவதும் பௌர்ணமியன்று நிலா இருளடைவதும் அவர்களை அச்சப்படுத்தியிருக்கும். இதற்கு காரணம் (பாம்பு, ராகு, கேது) இதுதான் என அப்போது அவர்களுக்கிருந்த அறிவுப்படி எதையாவது அக்கால மக்களுக்கு ஒவ்வொரு பகுதியிலும் ஒருவாறாக சொல்லியிருக்கலாம். இதெல்லாம் நிழல்கள்தான் என்பது இன்றைக்கு அறிவியல் கண்டுபிடித்துவிட்டது.

அடுத்தடுத்து நடக்கும் இவ்வாறான இரண்டு நிகழ்வுகளுக்குள் இருக்கும் கால இடைவெளியை ஒருமுறை கணித்து, அடுத்தமுறை தோன்றும் இடைவெளியோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே அடுத்தடுத்து அது தோன்றக்கூடிய காலக்கணக்கு எளிதில் வசப்பட்டுவிடுகிறது. ஏற்கெனவே நாழிகை, நாட்கள், மாதம், வருடம் என அவன் வகுத்த கணக்குகளின் துணையால் அடுத்தடுத்த தொடர்ச்சியான கிரகணங்களை அவன் கணித்துவிடுகிறான். இதனடிப்படையில்தான் சித்தர்களும் கோள்களின் நகர்வுகளை கணித்திருக்கக்கூடும். இது அறிவை பயன்படுத்தியவர்களின் கூட்டுச்செயல்தானே தவிர தனி மனித சாகசமில்லை. இதிலெல்லாம் கடவுளின் அருள், ஞானம் என்பதுமாதிரியான தனிப்பட்ட விசேஷங்கள் எதுவுமில்லை. அப்படி ஒன்று இருந்திருந்தால் அவ்வுண்மைகளோடு தோராயமான புனைகதைகளெல்லாம் கலந்து இன்றுவரையிலும் மக்கள் மத்தியில் உலவிக்கொண்டிருக்க வாய்ப்பேயில்லை.

எக்காலத்திலும் அதிகமான ஆர்வத்தோடும் அக்கறையோடும் ஆழ சிந்திக்கிறவனால்தான் எல்லா உண்மைகளும் மக்களுக்குத் தெரியவந்தது, தெரியவருகிறது. அறிவியல் வளர்ந்த இக்காலகட்டத்திலும் நிலவில் வளர்பிறையும் தேய்பிறையும் எப்படி தோன்றுகிறது என்பது முக்கால்வாசிப் பேர்களுக்குத் தெரிவதில்லை என்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என எண்ணிப்பாருங்கள். மின்சாரம் வராத காலகட்டத்தில் இரவுகளில் இந்த வானத்தோடும் நிலவோடும் விண்மீண்களொடும்தான் நாமும்தான் வாழ்ந்துகொண்டிருந்தோம். பல நூறு ஆண்டுகளாக இப்படி இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்களின் கண்டுபிடிப்புகள்தான் இவைகளேதவிர கடவுளும் இல்லை மண்ணாங்கட்டியுமில்லை.

அப்படி கடவுள் ஒருவனே எல்லாவற்றுக்கும் காரணமாகவும் மனிதர்களைப் படைப்பதாகவும் இருந்தால், ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் அதன் மூளையில் பகவத்கீதையையோ குர்ரானையோ பைபிளையோ இன்னபிற புனிதக்கதைகளையோ புகுத்தி படைக்கலாமே?

பிறந்து சில நாட்களே ஆன பலகுழந்தைகள் நீராலோ நெருப்பாலோ விபத்தாலோ இறந்து போகும்படி படைக்கப்படுவது ஏனோ?

No comments:

Post a Comment